பிடல் காஸ்ட்ரோ - 1
பிடல் காஸ்ட்ரோ - கம்யூனிஸ வரலாற்றில் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ க்யூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர், கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24, 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ரஷ்யா - அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஷ்யா விற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார். காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ ஆவார். காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம் ஆகும். ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார் ஆவார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
ஒரு பக்கம் மக்கள் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருந்தார்கள். வறுமை மக்களை வாட்டி வதக்கிக் கொண்டு இருந்தது. அடிப்படை வசதிகள் கூட மக்களிடம் காணப்பட வில்லை. மறுபுறம் மாடு திருடி பிழைத்தவர்கள் எல்லாம் தலைவர்களாக மாறி க்யூபாவை காலி செய்துகொண்டு இருந்தார்கள். மேலும், அவர்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் இருந்தனர்.அந்த சிறு வயதிலேயே இதனைக் கண்ட பிடல் காஸ்ட்ரோ கொதித்துப் போனார்.
காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத் திறமையால் பிடல் மக்களைக் கவர்ந்தார். 1952 ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் பத்திரிக்கையை துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார்.
காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம் செய்தது ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் ஒன்று விட்ட சகோதரர் எமிலியோவிற்காக. அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார் யார் எந்த எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது பிடலின் பொறுப்பு. வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார்.அதுபோல, கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும் தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டிலிருந்தே கடுமையாக பிரச்சாரம் செய்தார். அத்தேர்தலில் வெற்றியும் கண்டார்.
