பகத் சிங்

bookmark

பகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த வீர நாயகன். பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர். தன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார். பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.

1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார். மார்ச் 1926இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார். ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

பகத்சிங் அம்ரிட்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார். மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். செப்டம்பர் 1928இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் அவர் உருவெடுத்தார்.

லாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்

இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை. பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதாலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.

சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார். ஏப்ரல் 8 அன்று , போலீஸ் படைகளுக்கு எல்லை அற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்ட மன்றம் கூடி இருந்தது.

பகத் சிங் மற்றும் அவரது தோழர் பட்டுகேஸ்வர் தத் ஆகிய இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் " இன்குலாப் ஜிந்தாபாத் , ஏகாதிபத்தியம் ஒழிக" என்று கூறிய படி குண்டுகளை வீசினார்கள். குண்டுகளை வீசிவிட்டு அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பதில் , தாங்களாக முன்வது கம்பீரமாக சரணம் அடைந்தார்கள். உண்மையான்ன புரட்சி என்பது உண்மையில் மக்களைக் கொள்வது அல்ல என்பதை பகத் சிங்க் அறிந்திருந்தார். அதனால் தான், மக்கள் இல்லாத இடமாகப் பார்த்து குண்டுகளை வீசினார். நீதிமன்றத்தில் கூட வெள்ளைக் கார நீதிபதி , இது பற்றி கேட்க " கேளாத ஆங்கிலேயர்களின் செவிட்டுக் காதுகளுக்கு உரைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம்" என்று கம்பீரமாக நீதிமன்றத்திலேயே சொன்னாராம் பகத் சிங்க். அது மட்டும் இல்லை விசாரணையின் போது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர்.

கடைசியாக ஆங்கிலேயர்களின் அந்த நீதி மன்றம் பகத் சிங், உட்பட அவரது கூட்டாளிகளான சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், இதில் கொடுமை என்ன என்றால் ,பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்கு தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்தில் நமது தேசப் பிதா, என்று எல்லோராலும் அன்புடன் சொல்லப்படும் காந்திஜி கையொப்பம் இட்டார் . இது வரலாற்றில் கருமை நிறத்தில் பதிக்கப்பட்டுள்ள உண்மை நிகழ்ச்சி .

தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் கூட இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.

பகத் சிங்கின் தூக்கு தண்டனைக் காலம் நெருங்கியது. பகத் சிங்கின் அப்பா பிரிட்டிஷ் அரசிடம் மகனை மன்னித்து விடுவியுங்கள் என்று கருணை மனு அளித்தார். தனது தந்தையின் இந்த செயலை கேள்விப்பட்ட பகத் சிங்க் " இனி நான் உங்களை எனது தந்தை என்று கூற மாட்டேன். இனி நமக்குள் இருந்த உறவு முறிந்தது" என்று கடிதம் எழுதுகிறார். அதுபோல, பகத் சிங்க் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் "அம்மா எனது பிணத்தை வாங்க வராதே, வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழ வேண்டிய தாக்கம் எழாமல் போய்விடும்" என்று எழுதிகிறார். இதனைப் படித்த பகத் சிங்கின் தாய்க்கு அக்கடிதம் கண்ணீரையே வரவழைத்தது .

பகத் சிங்கின் கடைசி நாட்கள் ( இக் கட்டுரையை ஆதாரத்துடன் நமக்குத் தந்த " தி இந்து " நாளிதழுக்கு நன்றி)

லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.

பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பகத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார். கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள்.

ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது.

எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.

“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”

ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?

பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.

அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,”. பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.

பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.” சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார். மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.

பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.

“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.

தூக்குமேடை நோக்கி...

மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.

“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்

இது எங்கள் மண்ணாக இருக்கும்

இது எங்கள் வானமாக இருக்கும்

தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்

மக்கள் கூடுவார்கள்

மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு

மரியாதை செலுத்துவார்கள்.”

மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.

“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.

தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார். அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.

சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

புரட்சியால் மட்டுமே முடியும்!

பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.

பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.

பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.

ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:

“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”

பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.

இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.