நீர் விளையாட்டுப் படலம் - 1038

bookmark

ஒருவன் நீர் முகந்து ஒருத்தியின் கூந்தலில் வீசுதல்

1038.    

தையலாளை ஒர் தார் அணி தோளினான்.
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்-
செய்ய தாமரைச் செல்வியை. தீம் புனல்.
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே!
 
செய்ய     தாமரைச் செல்வியை - சிவந்த தாமரையில் உறையும்
திருமகளை;  கையின்  தீம்புனல் ஆட்டும் - (தன்) கையினால் இனிய
நீரை   (மொண்டு   நீர்   ஆட்டும்);  களிற்றரசு  என்ன  -  ஆண்
யானைகளின் அரசைப் போல; ஓர் தாரணி தோளினான் - மலர்மாலை
யணிந்த   தோளுடையான்   ஒருவன்;  நீர்  முகந்து  -   தண்ணீரை
மொண்டு;  தையலாளை  நெய்  கொள் ஓதியில் - ஒருத்தியினுடைய
நெய் பூசிய கூந்தலில்; எற்றினான் - வீசினான். 

உவமையணி:     திருவை  யானை  நீராட்டுதல்.  “வரிநுதல் எழில்
வேழம்  பூ  நீர் மேற் சொரி தரப் புரிநெகிழ் தாமரை  மலர்  அங்கண்
வீறெய்தித் திருநயந்து இருந்தென்ன” (கலி. 47:5-7).  எதிர்  நின்று  தன்
இரு கைகளாலும் நீர் முகந்து தன் காதலியின் முடிமேல்  நீர்  சொரிவது
திருமகள் இருமருங்கும் இரு யானைகள் தம்  கைகளால்  நீர் சொரிவது
போன்றிருந்தது எனும் கற்பனையால். காதலனின் தோள்  அகலும்  அத்
தோள்களுக்கிடையே  கொடி  போன்றுள்ள  அவள்  வடிவமென்மையும்
தெய்வத்தன்மை  தோற்றுவிக்கும்  அவள்  பேரழகும்  சுட்டினார்  இக்
கோலமே கஜலட்சுமி சிற்பங்களாய் இன்று காணப்படும்.            25