நீர் விளையாட்டுப் படலம் - 1024

bookmark

1024.

பொன்-தொடி தளிர்க் கைச் சங்கம்
   வண்டொடு புலம்பி ஆர்ப்ப.
எற்று நீர் குடையும்தோறும். ஏந்து
   பேர் அல்குல் நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி.
   சீறடி கவ்வ. ‘காலில்
சுற்றிய நாகம்’ என்று.
   துணுக்கத்தால் துடிக்கின்றாரும்.
 
தளிர்க்கைப்     பொன்சங்கத்தொடி -  தளிர் போன்ற கைகளில்
அணிந்த    பொன்னாலும்   சங்குகளாலும்    ஆன    வளையல்கள்;
வண்டொடு    புலம்பி   ஆர்ப்ப  -  (பொய்கையில்   ஒலிக்கின்ற)
வண்டுகளின்   ஒலிகட்கு  மாறுபட்டு  ஒலிக்க;  எற்றும்  நீர்குடையும்
தோறும்   -   (அலை)   மோதுகின்ற  நீரில்   மூழ்கும்போதெல்லாம்;
ஏந்துபேர்  அல்குல்  நின்று  -  உயர்ந்த  பெரிய நிதம்பத்திலிருந்து;
கற்றை  மேகலைகள்  நீங்கி  -  (அலைக்கழிக்கப் பெற்றதனால்) (பல)
கோவையாகவுள்ள மேகலையென்னும் இடையணி கழன்று;  சீறடி கவ்வ
- சிறிய  பாதங்களைப் பற்றும் போது; காலில் சுற்றிய நாகம் என்று -
பாதங்களைச்   சுற்றிக்கொண்ட   பாம்பென்று  கருதி;  துணுக்கத்தால்
துடிக்கின்றாரும் - நடுக்கத்தால் துடித்துப் போகின்றவர்களும். 

(ஆயினார் என்று  கூட்டி. நான்காம் பாடலிலிருந்து வந்த உம் ஈற்று
உயர்திணைச் சொற்களை முடித்துக்கொள்க). 

பொற்றொடி  =  பொன்+தொடி.     இடையணி  அறுவதும் தெரியா
அளவிற்கு  நீர்விளையாட்டு  ஆர்வம்  மிக்கிருந்தது   என்க.  நாகம் -
பொதுப்   பெயராய்ப்   பாம்பினைச்சுட்டி   நின்றது.  பலரும்   மூழ்கி
எழுவதால் நீர் அலையெறிந்து கொண்டிருந்தது  என்பார். ‘ஏற்றும்  நீர்’
என்றார்.   மேகலை   காலில்  சுற்றியது   ஒருமுறையன்று;   பலமுறை
என்பார்.  “நீர்  குடையும் தோறும்” என்றார். மேகலை  காலில்  சுற்றிய
ஒவ்வொரு  முறையும் காலில் சுற்றியது நாகமே என  நினைந்த  மகளிர்
பேதைமை  மிகுதியைச்  சுட்டினார். ஒன்றை  மற்றொன்றாக  நினைத்து
மயங்குவதால் மயக்க அணி ஆயிற்று.                           11