நீர் விளையாட்டுப் படலம் - 1022
1022.
குண்டம் திரு வில் வீச.
குலமணி ஆரம் மின்ன.
விண் தொடர் வரையின் வைகும்
மென் மயிற் கணங்கள் போல.
வண்டு உளர் கோதை மாதர்
மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப்
புனற் கரை சார்கின்றாரும்;
வண்டுளர் கோதை மாதர் - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்மாலை
யணிந்த மகளிர்; மைந்தர்தம் வயிரத் திண்தோள் - ஆடவர்களின்
வயிரம்போல் வலிமை பொருந்திய திண்ணிய தோள்கள் என்னும்;
தண்டுகள் தழுவும் ஆசை - (கடைந்தெடுத்த அழகு பொலியும்)
தண்டாயுதங்களை (தோள்களை) ஆசையோடு தழுவிக்கொண்டு;
விண்தொடர் வரையின் வைகும் - வானத்தையளாவுகின்ற மலைகளில்
வாழும்; மென்மயில் கணங்கள்போல - மெல்லிய மயில் கூட்டங்கள்
செல்வதுபோல; குண்டலம் திருவில் வீச - (செவிகளில் அணிந்த)
குண்டலங்கள் வானவில்லினைப்போல் ஒளியுமிழ; குலமணி ஆரம்
மின்ன - சிறந்த மணிமாலைகள் மின்னலைப்போல் ஒளிசிந்த; புனல்
கரை சேர்கின்றாரும் - நீர்நிலையின் கரைகளை அடைகின்றவர்களும்.
புனல் - ஆகுபெயர். திருவில் - வானவில். வரையின் வைகும்
மயிற்கணங்கள் போல. தரையின் வைகும் மயிற்கணங்கள் புறப்பட்டன
என்பது ஒரு நயம். 9
