நீர் விளையாட்டுப் படலம் - 1018

bookmark

1018.

வண்டு உணக் கமழும் சுண்ணம்.
   வாச நெய் நானத்தோடும்
கொண்டு. எதிர் வீசுவாரும்;
   கோதை கொண்டு ஓச்சுவாரும்;
தொண்டை வாய்ப் பெய்து. தூநீர்.
   கொழுநர்மேல் தூகின்றாரும்;
புண்டரீகக் கை கூப்பி.
   புனல் முகந்து இறைக்கின்றாரும்.
 
வண்டு    உணக்  கமழும்  சுண்ணம்  -  (மகரந்தம்)  உண்ணும்
வண்டுகள்  உண்ண   விரும்புமாறு   மணக்கும்  சுண்ணப் பொடிகளை;
வாசநெய் நானத்தோடும் கொண்டு - நறுமணமுள்ள தைலங்களோடும்
கத்தூரியோடும் (கையிற்) கொண்டு; எதிர் வீசுவாரும் - (எதிர்) எதிராக
வீசிக்கொள்வாரும்;    கோதை    கொண்டு     ஓச்சுவாரும்    -
மலர்மாலைகளைக்கொண்டு  வீசிக்கொள்ளுவாரும்;   தூநீர் தொண்டை
வாய்ப்பெய்து   -   தூய   நீரினை.   கொவ்வைக்கனிபோன்ற  (தம்)
வாய்களிலே கொண்டு; கொழுநர்மேல் தூவுவாரும் - தங்கள்  கணவர்
மேல்     தூவுகின்ற  வரும்; புண்டரீகக்கை கூப்பி - தாமரைமலர்கள்
போன்ற (தம்) கைகளைக் குவித்து; புனல் முகந்து இறைக்கின்றாரும் -
நீரை மொண்டு இறைக்கின்றவரும். 

“பாலொடு    தேன் கலந்து அற்றே பணிமொழி; வால் எயிறு ஊறிய
நீர்”   (திருக்.   1121)  ஆதலின்.   “தூநீர்  தொண்டைவாய்ப்  பெய்து
கொழுநர்மேல்   தூவுவாரும்”    என்றார்.   துப்பை   வென்ற   செந்
துவர்இதழ்ச்   செய்ய   வாய்த்   தூநீர்   கொப்பளித்தனள்;  ஆம்பல்
அம்தேன்  எனக்   குடித்தான்”   (திருவிளை.   தருமிக்கு. 59) என்பார்
பிறரும். “தொண்டைவாய்ப் பெய்து  தூநீர்  கொழுநர்மேல் தூவுவாரும்”
என  இருந்த  படியே  (கொண்டுகூட்டாமல்)  கொண்டு. மகளிர் வாயில்
நீரைப்  பெய்து.  நீரைத் தூய்மையாக்கிப்  புனித  நீராகக்  கணவர்மேல்
தெளித்தனர்  எனவும் கொள்ளலாம்.  புனல்விளையாட்டில்  சுண்ணமும்
கோதையும்  வீசலைச்  சிந்தாமணி   (2659)யும்.  பரிபாடலும்  (9:39-40).
கலித்தொகையும் 67:6; 128: 18-19) கூறும்.                         5