நாட விட்ட படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
நாடவிட்ட படலம்
(இராமபிரான் கட்டளைப்படி சுக்கிரீவன் சீதையைத் தேடும்படி வானரப் படைத் தலைவர்களை எல்லாத் திசைகளிலும் அனுப்பிய செய்தியை கூறும் படலம் இது.
படையளவு பற்றிச் சுக்கிரீவனும் இராமனும் உரையாடுகின்றார்கள்; இராமன் இனி நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என்று சுக்கிரீவனிடம் கூறுகிறான்; அச்சுக்கிரீவன் அனுமனை அங்கதன் முதலியவர்களுடன் தென்திசைக்கு அனுப்புகிறான்; பிற திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புகிறான்; ஒரு திங்களுக்குள் தேடித் திரும்பிவருமாறு அவர்களுக்கு ஆணையிடுகிறான்; மேலும் தென்திசை செல்லும் வானர வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுகிறான்; இராமனோ, அனுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறுகிறான்; இராமன் அனுமனுக்கு உரைத்த அடையாளச் செய்திகள் சுட்டிக் காட்டப்படுகின்றன; பின்னர் இராமன் மோதிரம் அளித்து விடைகொடுத்து அனுமனை அனுப்புகிறான்)
லக்ஷ்மணன் செய்ய வேண்டியதை ஸ்ரீ ராமரிடம் பகிர்ந்து கொள்ள. இராமபிரான் சுக்கிரீவனை நோக்கி," சூரிய குமாரனே! இந்த மாபெரும் வானரசேனையின் அளவு இன்னதென்று சொல்ல முடியுமோ?" என்று கேட்டார்.
அதற்கு சுக்கிரீவன் ஸ்ரீ ராமரிடம்," இந்தச் சேனையின் தொகை எழுபது வெள்ளம் அதாவது வீரர்களின் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டும் என்று கணக்கிட்டு கூறலாமேயன்றி, முழுதுமாகக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சேனையை நடத்த உள்ள வானரத் தலைவர்களின் எண்ணிக்கை மட்டும் அறுபத்தி ஏழு கோடி ஆகும். மேலும் இவர்கள் அனைவருக்கும் தலைமைச் சேனாதிபதி நீலன் ஆவான்" எனக் கூறி முடித்தான்.
அது கேட்ட இராமபிரான் சுக்கிரீவனிடம்," நல்லது சுக்கிரீவா! இனி நாம் சும்மா பேசிக் கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இனி செய்ய வேண்டிய காரியத்தை சொல்வாயாக?" என்றார்.
" ஐயனே தங்களது சித்தப்படியே நடக்கட்டும்" என்று கூறிய சுக்கிரீவன் அனுமனை நோக்கி," வாயு வேகத்தில் எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடிய வீரன் நீ. கொடிய இராவணன் சீதா பிராட்டியை தென்திசை நோக்கித் தான் கடத்திச் சென்று இருக்க வேண்டும். மேலும்,அந்த இலங்கையும் தென்திசையில் தான் உள்ளதாகக் கேள்விப் பட்டேன். உனக்கு உறுதுணையாக அங்கதனும், ஜாம்பவானும் வருவார்கள். அத்துடன் இரண்டு வெள்ளம் வானர சேனையையும் அழைத்துக் கொண்டு தென்திசை நோக்கிப் புறப்படுவாயாக!" என்றான்.
பின்பு," மேற்குத் திசையில் இடபனும்,வடக்குத் திசையில் சதவலியும், கிழக்குத் திசையில் வினதணும் தலைக்கு இரண்டு வெள்ளம் சேனையுடன் புறப்பட்டுச் செல்வீராக!" என்று, அவர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான். இடபன் முதலிய வானரர்களை நோக்கி மீண்டும் சுக்கிரீவன்," நீங்கள் அனைவரும் சீதா பிராட்டியை ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் தேடுங்கள். மீண்டும் ஒரு மாதத்திற்குள் நீங்கள் அனைவரும் இங்கு திரும்பி வருதல் வேண்டும்" என்று ஆணையிட்டான்.
அவர்களுக்குக் கட்டளையிட்டு முடித்ததும், தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்து சுக்கிரீவன்," நீங்கள் இங்கு இருந்து புறப்பட்டு முதலில் விந்திய மலைக்குச் செல்லுங்கள். அந்த மலையில் சீதா பிராட்டியை தேடி முடித்த பிறகு நருமதை ஆற்றின் சுற்று வட்டாரத்திலும், ஏமகூட மலை, பெண்ணை நதிக்கரை, விதர்ப்ப தேசம் ஆகிய எல்லா இடங்களிலும் சீதா பிராட்டியைத் தேடுங்கள். அத்துடன் தண்டகாரணியம் சென்று அப்பகுதியில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதிலும் தேடி பின் அப்படியே அகத்தியர் வாழ்ந்த முண்டகத் துறை என்னும் சோலைக்குச் சென்றும் சீதா பிராட்டியைத் தேடுங்கள். பிறகு ஒருவேளை அங்கெல்லாம் பிராட்டி தென்படவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம் நேராக கோதாவரி நதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், சுவண நதி, கொங்கண தேசம், அருந்ததி மலை, மரகத மலை ஆகிய இடங்களுக்கும் சென்று தேடுங்கள் பிறகு அருகில் உள்ள திருப்பதி எனப்படும் திருவேங்கட மலையை சுற்றியும், அதன் அடிவாரத்திலும் தேடுங்கள். ஆனால், மலை ஏறி அங்கு எழுந்து அருளி இருக்கும் திருவேங்கடனை மட்டும் தரிசனம் செய்து விடாதீர்கள். அப்படி ஒருவேளை நீங்கள் திருவேங்கடனை தரிசனம் செய்து விட்டால், நீங்கள் அனைவரும் பாவங்கள் நீங்கி மோக்ஷத்தை அடையும் படி நேர்ந்து விடும். பிறகு ஸ்ரீ ராமனின் காரியம் எப்படி நிறைவேறும்?. அதனால் அந்த மலையின் மீது ஏறிவிடாமல் உடனே தொண்டை நாட்டை அடையுங்கள். அங்கும் பிராட்டியைத் தேடிப் பாருங்கள். அதன் வழியே சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் அடைந்து அங்கும் பிராட்டியை தேடிப் பார்த்து கிடைக்கவில்லை என்றால் மகேந்திர மலையை அடையுங்கள். அங்கும் பிராட்டி தென்படவில்லை என்றால் அதற்கு அப்பாலும் போகங்கள் தவறு இல்லை. ஒரு மாத காலம் தவணையாக எடுத்துக் கொண்டு நல்ல செய்தியுடன் மட்டும் திரும்புங்கள். இது எனது ஆணை" என்றான்.
அப்போது ஸ்ரீ ராமர் அனுமனை நோக்கி," வாயுவின் புதல்வனே, இவள் தான் சீதை என்று நீ அறிந்து கொள்வதற்காக, உனக்கு அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுகிறேன். கேள்! நகங்களோடு கூடிய அவளது கால் விரல்கள் இயற்கையான செந்நிறம் கொண்டு இருக்கும். மேலும் நான் கரும்பைக் கண்ட போதும், மூங்கிலைக் கண்ட போதும் கண்களில் மழைத்துளி போன்ற நீர் பெருக்குத் தாரையாகப் பெருக வருந்துவேன். ஏனென்றால், சீதையின் தோள்களை அவைகள் எனக்கு ஞாபகப் படுத்தியது.
சீதையின் கைகளைப் பற்றிச் சொல்கின்றேன் கேள். அதற்கு உலகத்தில் எந்த ஒரு பொருளையும் உவமையாகக் கூற இயலாது. கற்பகத் தளிரும், தாமரை மலரும் கூட அவளது கைகளின் அழகுக்கு இணை ஆகாது. அப்படிப் பட்ட அழகு.
மேலும், அவளுடைய அழகிய வயிற்றிலே அழகிய பொன்னிறமான கொடியின் வடிவமாகிய மடிப்புகள் மூன்று காணப்படும். மூவலகங்களிலும் வாழும் பெண்களெல்லாம் இவளுடைய அழகுக்குத் தோற்றுப் போன உண்மையை எடுத்துச் சொல்லி, அந்த உண்மையை நிலை நாட்டியதாகிய வெற்றிக்கு அறிகுறியாகத் தீட்டிய இரேகை போல அது விளங்கும். சீதையின் முகம் பெளர்ணமியில் வரும் சந்திரனைப் போலக் காணப்படும் என்று சொல்வதற்கில்லை. காரணம் சந்திரனிடத்திலும் கரும்புள்ளிகள் உண்டு. ஆகவே, சீதையின் முகம் பெளர்ணமியில் வருகின்ற சந்திரனைக் காட்டிலும் அழகானது.
சீதையின் வாய் இதழ்கள் போல அத்தனை சென்னிரமானதொரு தேனும் இல்லை! சீதையின் அந்த அழகான மூக்கை வல்லமை கொண்ட ஓவியம் தீட்டுவோராலும் தீட்டமுடியாது என்றால், சீதையின் மூக்கின் அழகை நீயே உருவகப் படுத்திக் கொள். சீதையின் நெற்றிக்கு எதையும் உதாரணமாகச் சொல்ல இயலாது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு எல்லாம் உவமையாகச் சொல்லக் கூடியதற்கும், வேறொரு உவமைப் பொருள் கிடைக்குமோ?. மேலும், நாங்கள் காட்டுக்கு வந்த பிறகு, சீதையின் முன் நெற்றிக் கேசங்களை வாரி அலங்கரிப்பவர் இல்லை. அப்படி அலங்கரிக்கப்படாமல் இருந்தும் அவளுடைய முன் நெற்றியின் அழகுக்கு ஒரு குறையும் உண்டாகவில்லை.
சீதையின் கூந்தலைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மேகத்தைப் பிடித்து சீவிக் கட்டி, அதற்கு நெயப்பையும், வாசனையையும் உண்டாக்கி, பின்னும் பெரிய இருட் குழம்பிலே தோய்த்து கரிய நிறம் அமையச் செய்து, குளற்கற்றை என்று பெயரிட்டு பெரும் பாரத்தை வைத்தால், அதுவே அவளின் கூந்தல் தொகுதி ஆகும். அது மட்டும் அல்ல, அவளின் நடை அழகைக் கண்டு அன்னப் பறவைகளும் வெட்கும். அவளது மேனியின் நிறத்திற்கு உவமை அவள் மேனியின் நிறம் தான். வேறு ஒப்பீடு உலகத்தில் இல்லை.
உண்மையில் மங்கையர்க்குக் கூறுகின்ற சாமுத்திரிகா லட்சணங்கள் தாமரை மலரில் வீற்று இருக்கும் திருமகளுக்கும் நிரம்ப அமையவில்லை. ஆனால், சீதைக்கு அவ்வுத்தம, லட்சணங்களில் எதுவும் குறையவில்லை! இதுவே நீ அவளை அறிந்து கொள்வதற்கு உரிய அடையாளம்" என்று சீதையின் அடையாளங்களைக் கூறி முடித்தார்.
பிறகு மீண்டும் இராமபிரான் அனுமனை நோக்கி ," முதன் முதலில் நானும் தம்பி லக்ஷ்மணனும் ஜனக மகாராஜரின் யாகத்துக்கு விசுவாமித்திர முனிவருடன் சென்றோம். அப்போது தான் சீதையை கன்னி மாடத்தில் முதன் முதலாகக் கண்டேன். அப்போதே நாங்கள் இருவரும் எங்கள் மனதை ஒருவரிடம் ஒருவர் பரி கொடுத்து விட்டோம். பின்பு நான் சிவனின் வில்லை சீதையின் சுயம்வரத்தின் போது உடைத்தேன், அது கேள்விப்பட்ட சீதை " வில்லை உடைத்த அந்த நபர், அன்று நான் கன்னி மாடத்தில் கண்ட அவராக இல்லாவிட்டால். நான் எனது உயிரையும் விடுவேன்" என்று தனது கற்பு நிலை தவறாமல் தோழிகளிடம் கூறினாள். பிறகு திருமணம் முடிந்து நான் சிறிய தாயின் விருப்பப்படி கானகம் செல்ல வேண்டி உடன் பட்டபோது சீதையைக் கண்டு ' நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து, பின் திரும்பி வருவேன். அதுவரை எனது பிரிவுத் துன்பத்துக்கு வருந்தாது, நீ இங்கே இனிது இரு!' என்றேன். அது கேட்டு சீதை மிகவும் வருந்தி தானும் உடன் வருவதாகக் கூறினாள். முன் பின் தெரியாத அந்தக் கானகத்துக்கு வந்தால் சீதை கஷ்டப்படுவாளே, அங்கு அவள் படும் கஷ்டம் என்னையும் துன்பப்படுத்துமே என்னும் எண்ணத்தில் அவளை நோக்கி ,' சீதை, இதுவரையில் நீ எனக்கு மகிழ்ச்சியைத் தந்தவளாக இருந்தாய். இப்போதோ துன்பத்தைக் கொடுக்க சித்தம் கொண்டாயோ?" என்றேன். அதற்கு அவள் என்னைப் பார்த்து," ஐயனே, இனி உங்களுக்கு என்னால் தான் துன்பம் வரப் போகிறது போலச் சொல்கின்றீர்களே!" என்று நிஷ்டூரமாகச் சொன்னாள். பிறகு நாங்கள் மூவரும் கானகம் செல்லும் போது, என்னிடத்தில் சீதை," சுவாமி, கானகம் என்பது எது? அதன் எல்லை எங்கு இருந்து ஆரம்பிக்கும்?' என்று கேட்டாள். இதுவே எனக்கும் சீதைக்கும் இடையே உள்ள அடையாள மொழிகள் ஆகும். நீ சீதையைக் காணும் போது நீ என்னால் அனுப்பப்பட்டவன் என்பதை அவள் அறிய நான் சொல்லிய இவை உனக்குப் பயன்படும் என நம்புகிறேன். அப்படியும் சீதைக்கு சந்தேகம் தீரவில்லை என்றால். இதோ நான் தரும் இந்தக் கணையாழியை சீதையிடம் காட்டு" என்று கூறி விட்டுப் பிறகு விரல்களில் இருந்த கணையாழியை அனுமானிடம் கொடுத்தார் ஸ்ரீ ராமர்.
அனுமனும், இராமர் கொடுத்த கணையாழியைப் பெற்றுக் கொண்டு, அதனைக் கண்களில் ஒத்திக் கொண்டு பின் இராமபிரானிடம் விடைபெற்று சுக்கிரீவன் தனக்கு அளித்த பரிவாரங்களின் துணையுடன் தென்திசை நோக்கிச் சென்றார்.