நற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனை மொழிகள்

நற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனை மொழிகள்

bookmark

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

"நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:14-15).

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).

"உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்தேயு 5:44).

"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).

"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).

"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).

"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).

இயேசு எதிரிகளோடு மோதல் :-

இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன் வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தீவிரவாதிகள் என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.

இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார் (காண்க: லூக்கா 11:37-53). ஆயினும் எல்லாப் பரிசேயர்களோடும் மறைநூல் அறிஞர்களோடும் இயேசு மோதினார் என்பது சரியல்ல. இயேசு பல முறை பரிசேயரின் வீட்டில் விருந்து அருந்தச் சென்றார் (காண்க: லூக்கா 7:36; 11:37-38; 14:1). நிக்கதேம் என்னும் பரிசேயர் இயேசுவை அணுகிச் சென்று அவரது போதனையைக் கேட்டார் (காண்க: யோவான் 3:10-21); இயேசுவுக்கு ஆதரவாகப் பேசினார் (காண்க: யோவான் 7:45-51); இறந்த இயேசுவின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தார் (காண்க: யோவான் 19:39-42).

இறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை (காண்க: மத்தேயு 22:23-32).