நகர் நீங்கு படலம் - 1854
1854.
‘ வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ!
‘வாழ்வினைநுதலிய மங்கலத்து நாள் - மகுடம் தரித்து அரச
வாழ்வு வாழக்கருதப்பெற்ற அதே மங்கல நல் நாளிலே; தாழ்வினைஅது
வர - தாழ்த்துகின்றவினையானது வருதலால்; சீரை சாத்தினான்; -
இராமன் மரவுரியை அணிந்தான்; சூழ்வினை நான்முகத்துஒருவன்-
விதியை வகுத்து அளிக்கும் பிரம தேவனே; சூழினும் -தவிர்க்கும்
வழியைஆலோசித்தாலும்; ஊழ்வினை - (செய்தவனைச்சென்று
அடையும்) அந்த ஊழ்வினை; ஒருவரால் -; ஒழிக்கற்பாலதோ?-
நீக்கிக்கொள்ளும் தன்மை உடையதோ? இல்லைஎன்றபடி.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினும் தான் முந்துறும்”
என்ற திருக்குறளை இதனோடுஒப்பிடுக. முன்னர் நிகழ்ச்சியும், பின்னர்
உலகொப்பிய ஒரு கருத்தும் ஒத்து வருதலின்வேற்றுப் பொருள் வைப்பணி.
விதிக் கடவுளாகிய பிரம தேவனாலேயே ஊழ்வினையைத் தடுக்க
இயலாதாயின் வேறு ஒருவரலாலும் இயலாது என்றபடி. திருமாலின்
அவதாரமாகிய இராமனுக்கு வினைஎன்பது ஒன்றில்லை; ஆயினும், தேவர்
வேண்டச் செய்துகொண்ட சங்கற்பம்தானே இம்மனிதவடிவ நிகழ்ச்சியில்
வினையாயிற்றென உய்த்து உணர்க. செய்த சங்கற்பம் அவ்வாறே
இறைவற்கும்நிகழும்; அதுவும் மாற்ற ஒண்ணாததாம். ‘ஓ’
வினாப்பொருட்டு. 159
