நகர் நீங்கு படலம் - 1844

bookmark

இலக்குவனுக்கு இராமன் மொழிதல் (1844-1845)

இலக்குவனைப் பெற்றோருடன் இருக்க இராமன் கூறுதல்  

1844.    

தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
‘வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்’ எனா,

     தான்புனை சீரையை - (இராமன்) தான் அணிந்துள்ளது  போன்ற
மரவுரியை;  தம்பி சாத்திட - தம்பியாகியஇலக்குவனும் அணிந்துகொள்ள;
தேன் புனை தெரியலான்செய்கை நோக்கினான்- தேன் நிறைந்த
மாலை அணிந்த  இலக்குவனின் செயலை இராமன் பார்த்து;‘வான்புனை
இசையினாய்! - தேவருலகம்  புகழும் புகழினை உடையாய்; நீ
மறுக்கிலாது - நீ மறுக்காமல்;  யான் புகழ்- நான் சொல்லுகின்ற;
இனையது  ஓர் உறுதி - இத்தகைய ஒரு நல்லசொல்லை; கேள்’-
கேட்பாயாக; ’ எனா - என்று சொல்லி.

     புனை சீரை என்றாரேனும் புனைந்தது போலும் சீரை என்றுபொருள்
கொள்க.  ‘தம்பியும் சாத்திட’  என்ற எச்சவும்மை வருவித்துரைக்கப்பட்டது.
தெரியலான் செய்கை - இலக்குவன் செயல்.  பார்த்து;  முற்றெச்சம்
இலக்குவன் செய்ததைப்பார்த்து இராமன் ஒரு கருத்தைக் கூறலானான். 149