நகர் நீங்கு படலம் - 1829

bookmark

1829.    

ஆன்றான் பகர்வான் பினும்;
     ‘ஐய! இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத்
     தம்முனைப் போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித்
     தாதையை வாகை கொண்டோ?
ஈன்றாளை வென்றோ, இனி,
     இக் கதம் தீர்வது?’ என்றான்.

     ஆன்றான்-  குணங்களால்  உயர்ந்து  அமைந்தவனாகிய  இராமன்;
பினும்பகர்வான் - மேலும் சொல்வான்; ‘ஐய! - ஐயனே;  இவ்வைய
மையல் தோன்றா நெறிவாழ் - இந்த உலக அரசாட்சி என்கின்ற
மயக்கம் அற்ற நன்னெறியில் இருந்து  கொண்டுள்ள;  துணைத்
தம்முனைப் -உன்னுடைய துணையாகிய அண்ணனைப் (பரதனை)ப்;
போர்  தொலைத்தோ? - சண்டையில்தோல்வியடையச்செய்தோ;
சான்றோர்  புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?-
பெரியோர்களாற் புகழப்பெறும் ஒப்பற்ற நம் தந்தையாகிய தயரதனை
வெற்றி கொண்டோ; ஈன்றாளை வென்றோ?-பெற்ற தாயை (கைகேயியை)
வெற்றி கொண்டோ; இக்கதம் -(உனக்கு வந்துள்ள)இக் கோபம்;  இனித்
தீர்வது?’ -  இனி நீங்குவது;’  என்றான்-.

     அரசாட்சி பரதனுக்குக் கிடைத்திருப்பது என்பதெல்லாம்
அயோத்தியில் உள்ளார் அறிந்தனவே. கேகய நாட்டில் உள்ள பரதனுக்கு
அச்செய்தி இன்னும்தெரியாது  ஆகலின், ‘இவ் வையம் என்கிற மையல்
அறியப்படாத கேகய நாட்டில் வாழும்  உன்அண்ணனாகிய பரதனை’
என்றும் இராமன் கூறியதாகக் கொள்க. ‘எள்ளரிய குணத்தால்’ இராமனையே
அனையவன் பரதன் ஆகையால்,  இராமனுக்கு அரசில் ஆசையின்றிச்
சன்மார்க்கத்தில் ஆசைசெல்லுமாப் போல;  பரதனும் வைய மையலின்றி
நன்னெறியில் வாழ்கின்றவன்’  என்பது உரைவிளக்கமாகும்.          134