நகர் நீங்கு படலம் - 1817

இராமன் வினவுதல்
இராமன் இலக்குவனுடன் உரையாடுதல்
1817.
மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு
விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த
தடக் கையானை,
‘என் அத்த! என், நீ, இமையோரை
முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு
ஏது?’ என்றான்.
மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற - மின்னலைப்
போன்று கோபநெருப்பு விட்டுப் பிரகாசிக்கும்படி நின்றுகொண்டிருந்த;
பொன் ஒத்த மேனி -பொன்னிறமான திருமேனியையும்; புயல் ஒத்த
தடக் கையானை - மேகம் போன்றவாரிவழங்கும் வண்மையுடைய பெரிய
கையினையும் உடைய இலக்குவனை (நோக்கி); ‘என் அத்த- என்
தலைவனே!; இமையோரை முனிந்திலாதாய் - (இவ்வாறு நிகழ்தற்கு
மூலமாகிய -ஏதுவாகிய) தேவர்களைக் கோபிக்காதவனாகிய; நீ -;
சன்னத்தன் ஆகி - யுத்தமுனைப்புடையவனாய்; தனு ஏந்துதற்கு ஏது
என்?’ - வில்லை ஏந்துதற்குக் காரணம் என்ன; என்றான் -
அத்த என்பது அன்புபற்றி வந்த உயர்சொல் ‘இவ்வாறு எல்லாம்
நிகழத் தேவர்களே மூலகாரணம். அவர்களை வெறாத நீ இப்பொழுது
வில் ஏந்த என்ன காரணம்’ என்று வினவியதாகக்கொள்க. ‘இறையேனும்
முனிந்திலாதாய்’ என்ற பாடம் இவ்விடத்தில் சிறப்புடையது.சிறிதளவேனும்
எப்பொழுதும் கோபம் வராத சாந்தமூர்த்தியாக விளங்கும் நீ இன்று சினம்
மூண்டு வில் ஏந்தக் காரணம் என்ன என்று கேட்டதாக உரைக்கப் பொருள்
சிறத்தல் காண்க. அது பின்னர் ‘அறம் வற்றிட ஊழ் வழுவுற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன்விளைந்தது?” (1730) என
வருவதனோடும் பொருந்துமாறும் காண்க. இனித் தேவர்களிடம் பெரிய
பக்தி உடைய நீ - அவர்களை முனியாத நீ இன்று வில் ஏந்தக் காரணம்
என்ன என்று கூறியதாகக்கொண்டு முன்னர் இப்படலத்து 118 ஆம்
பாடலாற் கூறிய இலக்குவன் வார்த்தை செவிப்பட்டு இராமன் கூறுவதாகவும்
கொள்ளப் பொருள் ஒன்றும். 122