நகர் நீங்கு படலம் - 1810

1810.
அடியில் சுடர் பொன்
கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப
பிடியில் தடவும் சிலை
நாண் பெரும் பூசல் ஓசை,
இடியின் தொடர,
கடல் ஏழும் மடுத்து, இஞ் ஞால
முடிவில் குமுறும்
மழை மும்மையின்மேல் முழங்க,
அடியில்சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப -
பாதங்களில் ஓளிவீசும்பொன்னால் ஆகிய வீரக்கழலை கடல் வெட்கமுறும்
படி பேரொலி செய்ய; பிடியில் தடவும் -கைப்பிடியால்தடவப் பெறுகின்ற;
சிலை நாண் பெரும் பூசல் ஓசை - வில்லினதுகயிற்றைத்தெறிப்பதால்
உளதாகும் பெரிய ஆரவார ஒலி; இஞ்ஞால முடிவில் -இந்த உலக
முடிவில்; கடல் ஏழும் மடுத்து - ஏழு கடல்களையும் குடித்து; இடியின்
தொடர -இடிகளோடு தொடர்ந்து; குமுறும்- முழங்குகின்ற; மழை-
மழையைக்காட்டிலும்; மும்மையின் மேல் முழங்க- மூன்று மடங்கு
அதிகமாக ஒலிக்க.
வில்லில் நாண் ஏற்றிய பிறகு நாணின் இறுக்கத்தைச் சோதித்துத்
தெறிப்பர்;தெறிக்கும்போது எழும் ஓசை பேரொலியாக உண்டாகும்.
அதை வருணிப்பது கவிமரபு. 115