நகர் நீங்கு படலம் - 1808

கைகேயிமேல் சினந்து இலக்குவன் போர்க்கோலம் மேற்கொளல்
1808.
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்
சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை
ஊட்ட விரும்பினாளே!
நங்கைக்கு அறிவின் திறம்!
நன்று, இது! நன்று, இது!’ என்னா,
கங்கைக்கு இறைவன்
கடகக் கை புடைத்து நக்கான்.
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை - சிங்கக் குட்டிக்குக்
கொடுத்தற்குரிய இனிய சுவையுடைய மாமிசத்தை; வெங்கண்நாயின் சிறு
குட்டனை - கொடிய கண்ணை உடைய நாயின் சிறு குட்டிக்கு; ஊட்ட
விரும்பினாளே! -உண்பிக்க ஆசைப்பட்டாளே; நங்கைக்கு - கைகேயிக்கு;
அறிவின் திறம் நன்று இது!நன்று இது’ - புத்தி வன்மையாகிய இது
நன்றாயிருந்தது;’ என்னா - எனச் சொல்லி; கங்கைக்கு இறைவன் -
இலக்குவன்; கடகக் கை - கடகம் அணிந்ததன்னுடைய கையை;
புடைத்து - தட்டி; நக்கான் - சிரித்தான்.
பொருத்தம் அற்றசெயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு
கூறினான். சிறுகுட்டனை -குட்டனுக்கு உருபுமயக்கம்; நான்காவதன்கண்
இரண்டாவது வந்தது. ‘நன்று இது’ இகழ்ச்சிக்குறிப்பு - கங்கைவரை உள்ள
நாடு கோசலம் ஆதலின் இலக்குவன் ‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான்.
இனி சரயு நதிக்கு ‘இராமகங்கை’ எனும் பெயருண்மையின்அதுபற்றிக்
‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான் என்பது ஏற்குமேல் கொள்க. 113