நகர் நீங்கு படலம் - 1792

bookmark

1792.    

சேதாம்பல் போது அனைய
     செங் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற,
     புணர் முலைமேல் பூந் தரளம்
மா தாம்பு அற்றென்ன
     மழைக் கண்ணீர் ஆலி உக,
நா தாம் பற்றா மழலை
     நங்கைமார் ஏங்கினார்.

     நாதாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப்
பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்;
சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து;  வெண் தளவப் போதுஆம்பல்
தோன்ற - வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித்
தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்தமார்பகங்களின் மேல்;
மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த்துளி; பூந்தரளம்-
அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்தகயிறுஅறுந்து
ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார்-
அழுதார்கள்.

     எழுத்து விளங்காத மழலைப் பேச்சு என்பார் ‘நா தாம் பற்றா மழலை’
என்றார். ‘ வாயில்பல் வெளித் தோன்ற அழுதார்’ என்பது அவலத்தின்
உச்சம்.  இளமகளிர் நாணத்தாற் சிறந்தவர்ஆதலின் பல் வெளித் தோன்ற
நகுதலும் செய்யார்,  இன்று பல் வெளித் தோன்ற அழுகின்றனர்என்பதாம்.
இதனை இவள் மன்னும் ஒள்நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்;
முன்நுனைதோன்றாமை  முறுவல் கொண்டு அடக்கித் தன்,  கண்ணினும்
முகத்தினும் நகுபவள்;  பெண் இன்றி, யாவரும் தண் குரல் கேட்ப நிரை
வெண்பல் மீயுயர் தோன்ற நகா அ நக்காங்கே, .....உண்கண்ஆயிதழ் மல்க
அழும ’் என்னும் (கலித். 142. 6 -12) பாடற் பகுதி கொண்டு விளங்க அறிக.
கழுத்தில் அணிந்த முத்துவடக் கயிறு அறுந்து ஒவ்வொரு முத்தாக மார்பில்
விழுவது  போலக்கண்ணீர்த் துளி முலைத்தலை வீழ்கிறது என்றார்.     97