நகர் நீங்கு படலம் - 1731

வசிட்டன் மன்னனைத் தேற்றுதல்
1731.
சொற்றாள், சொல்லாமுன்னம்,
சுடர் வாள் அரசர்க்கு அரசை,
பொன் - தாமரை போல் கையால்,
பொடி சூழ் படிநின்று எழுவி,
‘கற்றாய், அயரேல்; அவளே
தரும், நின் காதற்கு அரசசை;
எற்றே செயல் இன்று ஒழி நீ
என்று என்று இரவாநின்றான்.
சொற்றாள் - (கைகேயி) சொன்னாள்; சொல்லாமுன்னம் - அவள்
சொல்லிய அளவிலே (வசிட்டன்); சுடர்வாள் அரசர்க்கு அரசை - ஒளி
பொருந்திய வாளைஉடைய சக்கரவர்த்தியை; பொன் தாமரை போல்
கையால் - தன்னுடைய பொற்கமலம் போன்றகைகளால்; பொடி சூழ் படி
நின்ற எழுவி - புழுதி சூழப்பெற்ற மண்ணிலிருந்து தூக்கி; ‘கற்றாய்!
அயரேல் - எண்ணில் பல்நூல் ஆய்ந்து கடந்த அறிவாளனே,
சோர்வடையாதே; அவளே நின் காதற்கு அரசைத் தரும் - அந்தக்
கைகேயியை நின் அன்பு மகனாகிய இராமனுக்குஅரசாட்சியைத் தருவாள்;
செயல் எற்று? - வருந்தும் செயல் எத்தன்மைத்து; நீ இன்றுஒழி’ - நீ
இவ்வருத்தத்தை இப்பொழுதே ஒழிப்பாயாக; என்று என்று இரவா
நின்றான் -என்று பலமுறை சொல்லி வேண்டி நின்றான்.
துன்பம் வந்துழி வருந்தல் கற்றோர்க்கு அழகன்று என்பதால் ‘கற்றாய்!
அயரேல்’என்றான். காதலுக்கு (அன்புக்கு) உரியவனைக் ‘காதல்’ என்றே
குறித்த ஆகுபெயர் நயம்உணர்க. 37