திரைப்படத்தில்
திருபாய் அம்பானியின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட திரைப்படம் 12, ஜனவரி 2007 அன்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த குரு (2007-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்) என்னும் இந்தித் திரைப்படம், ஒரு மனிதன் இந்திய வணிக உலகில் தனது முத்திரையை பதிக்க எங்ஙனம் போராடுகிறான் என்பதை கற்பனையாக சக்தி குரூப் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கொண்டு காட்டுகிறது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா ராய், மாதவன், மற்றும் வித்யா பாலன் நடித்திருந்தனர். திரைப்படத்தில், அபிஷேக் பச்சன், குரு காந்த் தேசாய் என்னும் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இது திருபாய் அம்பானியின் குணநலனை ஒத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிதுன் சக்ரவர்த்தி ஏற்றிருந்த மானிக்தா வேடம் உண்மை வாழ்க்கையில் ராம்நாத் கோயங்காவை ஒத்திருந்தது. இந்தியா இதுவரை கண்டவற்றில் மிக உக்கிரமான பெருநிறுவன மோதலில் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களைத் தொடுப்பதில் முன்னிலை வகித்து தேசிய அளவில் புகழ்பெற்ற எஸ்.குருமூர்த்தியை மாதவன் ஏற்றிருந்த பாத்திரம் பிரதிபலித்தது.
குரு காந்த் தேசாய் என்கிற பாத்திரத்தின் உதவியுடன் திருபாய் அம்பானியின் வலிமையையும் இந்த படம் சித்தரிக்கிறது. "குருபாய்" என்று படத்தில் அபிஷேக் பச்சனுக்கு கொடுக்கப்படும் பெயரும், உண்மை வாழ்க்கையின் "திருபாய்" பெயரை ஒத்ததாக இருந்தது.
