திருபாயின் கட்டுப்பாட்டில் பங்குச் சந்தை
1982-ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வந்தது.[5] தங்களது பங்கு விலைகள் ஒரு இம்மியளவு கூடக் குறையாத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. வாய்ப்பை உணர்ந்த, கரடிச் சந்தையில் லாபமீட்டும் கல்கத்தாவைச் சேர்ந்த பங்குத் தரகர்கள் குழு ஒன்று ரிலையன்ஸ் பங்குகளை அதிக விலையில் விற்று பின் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கையிருப்பிலில்லாமல் விற்கத் துவங்கியது. இதனை எதிர்கொள்ள, மற்றுமொரு பங்குத் தரகர்கள் குழு - இன்று வரை இவர்கள் "ரிலையன்ஸின் நண்பர்கள்" என்று தான் குறிப்பிடப்படுகிறார்கள் - மும்பை பங்குச் சந்தையில் கையிருப்பு இல்லாத நிலையில் விற்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கத் துவங்கினர்.
காளைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய போதுமான பணம் இல்லாது போய் விடும். அப்போது அவர்கள் மும்பை பங்குச் சந்தையின் "பத்லா" வர்த்தக ஏற்பாட்டுக்கு தயாராய் இருப்பார்கள். இதன் அடிப்படையில் தான் கரடிச் சந்தையில் லாபமீட்டும் கூட்டம் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருந்தது. காளைகள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். பரிமாற்ற நிறைவுத் தேதி வரையிலும் ஒரு பங்கு ரூ. 152 என்கிற நிலையே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. நிறைவுத் தேதியில், காளைகள் பங்குகளின் பத்திரங்களை சமர்ப்பிக்க கோரியபோது இந்த கரடிச்சந்தை லாபமீட்டும் குழு திகைத்துப் போனது. ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருந்த பங்குத் தரகர்களுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை திருபாய் அம்பானியே வழங்கினார். பங்கு பத்திரங்களை வழங்க முடியாத நிலையில், காளைகள் "அன்பத்லா" (அபராதத் தொகை) தொகையாக பங்குக்கு ரூ.35 கோரினர். இதனால், பங்குகளின் தேவை அதிகரித்து, ரிலையன்ஸ் பங்குகளின் விலை சில நிமிடங்களிலேயே 180 ரூபாய்க்கும் அதிகமாய் விட்டது. இந்த வர்த்தகமானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருபாய் அம்பானி பங்குச் சந்தைகளின் முடிசூடா மன்னராகியிருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மோதுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் நிரூபித்தார்.
இந்த சூழ்நிலைக்கு ஒரு தீர்வினைக் காண, பம்பாய் பங்குச் சந்தை மூன்று வணிக நாட்களுக்கு மூடப்பட்டது.மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, கரடிச் சந்தையில் லாபமீட்டும் குழு பங்குகளை அடுத்த சில நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் "அன்பத்லா" தொகையை பங்குக்கு ரூ.2 என குறைத்தனர். இதனால் அதிகமான விலை அளவுகளில் சந்தையில் இருந்து ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் நெருக்கடி கரடிச்சந்தையில் லாபமீட்டும் குழுவுக்கு நேர்ந்தது. அத்துடன் திருபாய் அம்பானியே அந்த குழுவுக்கு பங்குகளை அதிகமான விலையில் வழங்கி கனமான ஆதாயம் ஈட்டினார் என்பதும் பிறகு தெரிய வந்தது.[6]
இந்த நிகழ்விற்கு பிறகு, அவரது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வரை நூல் வணிகம் செய்து கொண்டிருந்த ஒருவர் எப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் இவ்வளவு பெரும் பணத்தைப் புரட்ட முடிந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான பதிலை அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வழங்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1982-83 காலத்தில் ரிலையன்ஸில் ரூ.22 கோடியை முதலீடு செய்திருந்ததாக அவையில் அவர் தெரிவித்தார். குரோக்கடைல், லோட்டோ மற்றும் ஃபியாஸ்கோ ஆகிய பல நிறுவனங்கள் வழியாக அவர்களது முதலீடுகள் திருப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுவையான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்கள் அல்லது முதலாளிகளின் துணைப்பெயர்களும் ஷா என ஒரேபெயரில் முடிவதாய் இருந்தது. இந்த விடயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட விசாரணை ரிலையன்ஸ் அல்லது அதன் முக்கிய பங்குதாரர்கள் எந்த முறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தீர்மானித்தது.
