திருத்துறையூர்

பாடல் 741
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
பாடல் 742
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய
திறமேப ழகப்படு சாதக
விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ
உககால நெருப்பதி லேபுகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி
உலவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
துறையூர்நக ரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.