தாமஸ் ஆல்வா எடிசன் - 2
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.
மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.
1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது.
அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர். 1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. 2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. 3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது. வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார்.
கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது.
