தங்கரதம் கேட்டீரோ

bookmark

மணமான மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு இறந்த வீட்டிற்கு வருகிறாள். தன்னையும், தனது சகோதர, சகோதரிகளையும், தந்தை அருமையாக வளர்த்த கதையையெல்லாம் சொல்லி அழுகிறாள். இத்தகைய தந்தையின் அன்பு நீடித்து இருக்க வழியில்லாமல் இறந்து விட்டாரே என்று ஏங்குகிறாள். இனி பிறந்த வீடு தேடி வந்தால்,மதினிமார் மரியாதையாக வரவேற்க மாட்டார்கள் என்றெண்ணி அழுகிறாள். அருமையாக வளர்த்த மகளை மறந்துவிட்டு எமதர்மனைக் கேட்டு தங்கரதம் கொண்டுவரச் சொல்லி தந்தை போய்விட்டாரே என்று மகள் ஆற்றாது அரற்றுகிறாள்.

பரட்டைப் புளிய மரம்
பந்தடிக்கும் நந்த வனம்
பந்தடிக்கும் நேரமெல்லாம்
பகவானைக் கைதொழுதேன்
சுருட்டைப் புளிய மரம்
சூதாடும் நந்தவனம்
சூதாடும் நேரமெல்லாம்
சூரியனைப் பூசை செய்தேன்
ஆத்துக்கு அந்தப் புரம்
ஆகாசத் தந்தி மரம்
ஆழ்ந்த நிழலுமில்லை
என்னைப் பெத்த அப்பா
எங்களை ஆதரிப்பார் யாருமில்லை
குளத்துக்கு அந்தப்புரம்
குங்குமத் தந்தி மரம்
குளிர்ந்த நிழலுமில்லை-எங்களைக்
கொண்டணைப்பார் யாருமில்லை
ஆடை கொடியிலே
ஆபரணம் பெட்டியிலே
சீலை கொடியிலே
சிறு தாலி பெட்டியிலே
நீலக் குடை பிடித்து-நீங்கள்
நிலமளக்கப் போனாலும்
நிலமும் பயிராகும்
நின்னளக்கும் தோப்பாகும்
வட்ட குடை பிடித்து

வயல் பார்க்கப் போனாலும்
வயலும் பயிராகும்
வந்தளக்கும் தோப்பாகும்
சீமைக்கு அப்பாலே-சீமை ஆண்ட
சேது பதி கட்டி வச்ச
சீட்டாடும் மண்டபங்களே
சீட்டுப் பறக்காது
சிறுகுருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா
சிட்டுப் பறந்திருச்சே-இப்போ
சிறுகுருவி லாந்திருச்சே
காசிக்கு அப்பாலே
காசி ராஜா கட்டி வச்ச
காத்தாடி மண்டபங்கள்
காகம் பறக்காது.
கருங்குருவி லாந்தாது-என்னைப் பெத்த அப்பா
காகம் பறந்திருச்சே-இப்போ
கருங்குருவி லாந்திருச்சே
பாலூற்றிச் சாந்திடுச்சி
பவளமனை உண்டு பண்ணி
பவளமனையிலேயும்-எங்கள்
பாதம் பட்டால் தோஷமின்னு
நெய்யூற்றிச் சாந்திடுச்சு
நீலமனை உண்டு பண்ணி
நீல மலையிலையும்-எங்க
நிழல் பட்டால் தோஷமின்னு
ஆத்து வயிரக் கல்லு
அமைதியாப் புத்தகங்கள்
ஆனு வழுக்கிட்டா-எங்களை
ஆதரிப்பார் யாருமில்லை
குளத்து வயிரக் கல்லு
கும்பினியார் புத்தகங்கள்
குளமும் வழுக்கிட்டா-எங்களை
கொண்டணைப்பார் யாருமில்லை
பத்து மணி வண்டியேறி-நாங்க
பசியாக வந்தாலும்
பாலும் அடுப்பி லென்பார்
சண்டாளி வாசலிலே
பச்சரிசிச் சாதம் பா

எட்டு மணி வண்டியேறி-நாங்க
எளம் பசியா வந்தாக்கா
என்னா அடுப்பி லென்பா
எள்ளரிசிச் சாதம் என்பா
சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே
சரஞ்சரமாய்க் காய்த்தாலும்
முத்தத்து வாழை-நாங்க
முகம் வாடி நிக்கறமே
கள்ளி இடைஞ்சலிலே
கருங்கண்ணினாய் மின்னலிலே
கரும்பா வளர்ந்த மக-நானிப்போ
கவலைக்கு ஆளானேன்.

வேலி இடைஞ்சலிலே
வெள்ளரளிப் பின்னலிலே
வேம்பா வளர்ந்த மக-நானிப்போ
வேதனைக்கு ஆளானேன்
பத்து மலைக்ககு அப்பாலே
பழுத்த கனி வாழை
பழுத்த கனியிழந்தேன்-நானிப்போ
பாசமுள்ள சொல்லிழந்தேன்
தங்க தமிளரிலே
தண்ணீரு கொண்டு வந்தேன்
தண்ணீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
தங்க ரதம் கேட்டீயளோ
வெள்ளித் தமிளரிலே
வென்னீரு கொண்டு வந்தேன்
வென்னீரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
வெள்ளிரதம் கேட்டீயளோ
அண்டா விளக்கி
அரளிப் பூ உள்ளடக்கி
அண்டாக் கவிந்த உடன்
என்னைப் பெத்தார்-நாங்க
அரளிப்பூ வாடினமே.
தாலம் விளக்கி
தாழம் பூ உள்ளடக்கி
தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க
தாழம் பூ வாடினமே
நாளி மகிழம் பூ
நாகப்பட்டினம் தாழம் பூ
நடந்து வந்து சீர் வாங்க
என்னப் பெத்த அப்பா
நல்ல தவம் பெறலையே
குறுணி மகிழம் பூ
கும்பா வெல்லாம் தாழம் பூ
கொண்டு வந்து சீர்வாங்க-நாங்க
கோடி தவம் செய்ய லையே.

குறிப்பு : சத்திரத்து வாழை. இது அவர்களது சகோதரர்களின் மனைவிமாரைக் குறிக்கும். அவர்கள் வேறிடத்தில் பிறந்து இந்த வீட்டில் வந்து புகுந்தவர்கள். அவர்களைத்தான் சத்திரத்து வாழை காய்த்துக் குலுங்குகிறது என்று குறிப்பிடுகிறாள். இந்த வீட்டு முற்றத்திலேயே வளர்ந்த வாழை என்று தன்னைக் கூறிக்கொள்ளுகிறாள்.

சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
----------