சோழர்களின் மெய்க்கீர்த்திகள்

சோழர்களின் மெய்க்கீர்த்திகள்

bookmark

பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.

இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.