சொந்தக் கணவன்

bookmark

காதலனை உடனடியாகத் தாலி செய்து கொண்டு வந்து பெண் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. அவன் அசட்டையாக இருக்கவே அவள் கடிந்து கொள்ளுகிறாள். மறுநாள் அவனை அவள் சந்திக்க குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும்,பேசாமல் கோபமாயிருப்பது போல நடிக்கிறாள். அவன் நயமும், பயமுமாகத் தன் உணர்ச்சிகளை அவளிடம் கூறுகிறான். `சொந்தக் கணவன்` என்று அவன் தன்னை வருணித்துக் கொள்ளும் வரை அவள் பேசவில்லை. அதன்பின் அவள் முகம் மலர்ந்திருக்குமா? கடைசிவரை படியுங்கள்.

பருத்தி எல பிடுங்கி 
பச்சரிசி மை சேர்த்து 
சேர்ந்துதோ சேரலியோ 
செவத்தப் பிள்ள நெத்தியிலே,
இருப்பான கிணத்துக் குள்ளே 
இருந்து தலை முழுகும்போது 
கரும்பான கருத்தக் குட்டி 
கைகடந்த மாயமென்ன?
காலாங்கரை ஓடையிலே 
கண்டெடுத்த குண்டுமுத்து 
குண்டு முத்தைப் போட்டுவிட்டு 
சுண்டி முகம் வாடுறாளே
வாளு போல அருவா கொண்டு
வரப்புப் புல்லு அறுக்கும் போது
நீ தெம்பாச் சொன்ன சொல்லு
ரம்பம் போட்டு அறுக்குதடி
தண்டட்டி போட்ட பிள்ளா 
தயவான சொல்லுக் காரி 
இந்திர சாலக் காரி
என்ன மறந்திட்டியே!
பூவோசரம் பூவே
பொழுதிருக்கப் பூத்தபூவே
நா மோந்த பூவாலே
நான் ஒரு சொல் கேட்டேன்
கம்மங் கதிரறுக்க
கருத்தூருணி தண்ணிருக்க
புங்க நிழலிருக்க 
புருஷன் மட்டும் என்ன பயன்?
தூத்துக்குடி ஓரத்தில 
தொன்னூர் கட வீதியில 
போட்டுட்டுத் தேடுறாளே
பொன் பதித்த மோதிரத்தை 
கருத்தக் கருத்த பிள்ளா 
கைமசக்கம் தந்த பிள்ளா 
என் உசிரக் குறைச்ச பிள்ளா 
உருவிக்கோடி மோதிரத்தை 
வேப்ப மரத்துக்கிளி 
வித விதமாப் பேசுங்கிளி 
நான் வளர்த்த பச்சக்கிளி 
நாளை வரும் கச்சேரிக்கு 
வேப்ப மரத்தோரம் 
வெட்டரிவாள் சாத்திவச்சேன் 
வேப்பமரம் பட்டதிண்ணு 
விட்டதடி உன்னாசை 
பாக்கப் பகட்டுதடி 
பல்வரிசை கொஞ்சுதடி 
கேக்க பயமாயிருக்கே 
கிளிமூக்கு மாம்பழமே! 
வெள்ள வெள்ள சீலைக்காரி 
வெள்ளரிக்கா கூடைக்காரி 
கோம்ப மலை வெள்ளரிக்கா 
கொண்டு வாடி தின்னுபாப்போம் 
தங்கத்துக்கு தங்கம் இருக்க 
தனித் தங்கம் இங்க இருக்க 
பித்தளத் தங்கத்துக்கு
பேராசை கொண்டாயடி!
ஆல விளாறு போல 
அந்தப் பிள்ள தலை மயிராம் 
தூக்கி முடிஞ்சிட்டாலும் 
தூக்கணாங் கூடு போல 
கொண்ட வளர்த்த பிள்ளா 
கோத கண்ணி மாதரசி 
கொண்டாடி தலை மயித்தை 
கொடுங்கையிலே போட்டுறங்க! 
நில்லடி கட்டப் பிள்ளா 
நிறுத்தடி கால் நடைய 
சொல்லடி வாய்திறந்து 
சொந்தக் கணவனிடம் 
ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை 
அழகான கோழி முட்டை 
கோழி முட்டைவாடுனாலும் 
குமரி முகம் வாடுதில்ல.

வட்டார வழக்கு: அருவா-அரிவாள் (பேச்சு); பூவோசரம்பு-பூவரசம்பூ (பேச்சு); தண்டட்டி-காலணி, கைமசக்கம்-மிகுந்த மயக்கம், பிள்ளா-பிள்ளை, பெண்; கோதகண்ணி-கோதை, மாலை; கண்ணி-பூச்சரம்.

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு 
இடம். தூத்துக்குடி வட்டாரம்
-------------