சாமுவேல் ஜான்சன்
ஆங்கில மொழியை உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள் என்று நமக்கு தெரியும். அம்மொழி அவர்களின் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயன்பாட்டில் அந்த அளவுக்கு இல்லாமல் இருந்தது என்பதையும் வாசகர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.அக்காலத்தில் பிரெஞ்சும்,லத்தீனும் அதன் இடத்தை பிடித்துக்கொண்டு இருந்தன.பின்னர் மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன்.
ஆங்கில மொழிக்கு அகராதி கண்ட சாமுவேல் ஜான்சன் 18.9.1709 ஆம் ஆண்டு லிச் ஃ பீல்டு என்னும் இடத்தில் "மைக்கேல் ஜான்சன்"- "டெட்டி ஜான்சன்" தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் .ஜான்சன் அவர்களுக்கு சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட வியாதிகள் இருந்தது. அதன் காரணமாக உடல் நெளிந்து தான் காணப்பட்டார். ஒரு கட்டத்தில் நோய்களின் தாக்கம் அதிகரிக்கவே தனது கண்களில் ஒன்றை நிரந்தரமாக இழந்தார். அதே சமயத்தில் ஒற்றைக் கண்ணுடன் சாதனைகள் பல புரிந்தார்.
சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. படிக்க புத்தகங்கள் வாங்கித்தரக் கூட காசில்லை, இத்தனைக்கும் அவர் ஒரு புத்தக வியாபாரி.“வா மகனே! “ என்று உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் . அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொண்டார் சாமுவேல் ஜான்சன் .இதன் காரணமாக விரைவிலேயே ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிகளில் தேர்ச்சி பெற்றார் அவர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். ஆனால், தனது குடும்பத்தின் வறுமை காரணமாக அவர் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.அவரிடம் புது செருப்பு வாங்கக் கூட காசு இல்லை.அந்த அளவுக்கு ஏழ்மை. கிழிந்து போன செருப்பையே தைத்து, தைத்து போட்டுக் கொள்வாராம். செருப்புகளை தைக்கும் அந்தத் தொழிலாளியே ஒரு முறை ஜான்சனிடம் " இந்த செருப்பில் தைப்பதற்கு ஏது இடம்? இனி கொண்டுவராதே "என்று கடிந்து கொண்டாராம். அந்த அளவுக்கு ஜான்சனின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது.
அவரது வறுமை நிலையை கேள்விப்பட்ட அவரது நெருங்கிய நண்பர் ஒரு புதிய செருப்பை வாங்கி ஜான்சனின் வீட்டில் வைத்து விட்டு சென்றார். இதனைக் பார்த்த ஜான்சன் நண்பரைக் கடிந்து கொண்டு அந்த செருப்பை அவரிடமே அளித்தார். அந்த அளவுக்கு தன்மான உணர்ச்சி மிக்கவர்.
லண்டன் நகருக்கு குடியேறினார்.லண்டனில் அவருக்கு "கனவானின் மாத சஞ்சிகை" என்ற பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதும் வேலை கிடைத்தது. 1738 ஆம் ஆண்டு லண்டன் என்ற தலைப்பில் செய்யுட் கோவையை வெளி இட்டார் ஜான்சன். அது அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. என்றாலும் அவர் வறுமை நிலை தொடர்ந்தது.இந்த நேரத்தில் தான் எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். இவரின் நேரமோ என்னவோ பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை, வறுமை மட்டுமே. இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல, கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள். சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். இருந்தாலும், நம்பிக்கையோடு 'மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்' என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி ஏகத்துக்கும் அவரை வேலை வாங்கியது.
காசநோய், விரை புற்றுநோய், பல்மோனரி பிப்ரோசிஸ், தௌரேட் சிண்ட்ரோம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் கூட அவரது வாழ்க்கையில் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறை போய் மீண்டதும் நடந்தது. எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்துபோயிருந்தார் ஆனால் சாமுவேல் ஜான்சன் அசரவில்லை . ஒன்பது வருடகாலத்தில் கடும் உழைப்பில் ஜான்சனின் அகராதி எழுந்தது. அதில் மொத்தம் 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் செம தடியாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்து நாட்டை கலக்கி எடுத்தது. உலகம் முழுக்க சாமுவேலின் புகழ் பரவியது.
ஜான்சன் 1759 ஆம் வருடம் "ராசீல்ஸ்" என்னும் தத்துவ நூலை வெளியிட்டார். " ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை" என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.இதன் காரணமாக அவருக்கு "டாக்டர்" பட்டம் வழங்கப்பட்டது. அது மட்டும் அல்ல ஜான்சன் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் மிகவும் இறக்கம் கொண்டு இருந்தார். தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்தார். இருந்தாலும் கடைசி வரை அவரையும் வறுமை துரத்தியது.
அவரது அகராதி நூற்றி ஐம்பது வருடங்களுக்கு ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது.சாகிற வரை அவரை வறுமை தான் துரத்தியது. என்றாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன அவரின் வரிகளான,”மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான், குறைசொல்லிக்கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்பது அவரின் வாழ்வுக்கே பொருந்தும். ஆனால், அந்த வாழ்வில் அவர் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார் என்பதே நமக்கான பாடம். இப்பேற்பட்ட மிகப் பெரிய படைப்பாளி டிசம்பர் மாதம் 20 ஆம் நாள் 1784 ஆம் வருடம் இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.
