சர் ஐசக் நியூட்டன்

bookmark

ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.

நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.

1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே . வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார்.

நியூட்டன் ஈர்ப்பு விதியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என்பது யாவரும் அறிந்ததே. நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து தனது அன்றாடப் பணிகளில் ஈடுபடலானார்.

இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது!

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"