சத்தியேந்திர நாத் போஸ்

bookmark

சத்தியேந்திர நாத் போஸ் ,இந்திய இயற்பியலாளர் ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார்.

1916ல் சத்யேந்திரநாத் 'அறிவியல் பல்கலைக்கல்லூரி'யில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர்.

மட்டுவ இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.இதனைச் செய்ய, அவருக்கு ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரை தேவைப்பட்டது.

ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர் சத்யேந்திரநாத்தும் சாகாவும். (முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!) பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை ஜெர்மன் மொழியில் இருந்தது என்று. போசு மனம் தளராதவர் . தானும் கற்று, சாகாவிற்கும் ஜெர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர்!! அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையையும் அடைந்தனர்.

இது தவிர போஸ் பிரஞ்சு மொழியையும் திறம்படக் கற்றார்.அவருக்கு பாரிஸ் சென்று "ரேடியம்" கண்டு பிடித்த " மேரி கியூரி" அம்மையாருடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.அவருடன் சேர்ந்தும் பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.இவர் கண்டுபிடித்த "சல் ஃ போனாமைடு" என்ற வேதிப் பொருள் கண்ணுக்குப் போடும் சொட்டு மருந்தாகப் பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்திய அறிவியல் பேரவை மாநாட்டில் அமர்வுத் தலைவராகவும், பின்பு இந்திய அறிவியல் பேரவை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.இங்கிலாந்து அரசு இவரைப் பாராட்டி " இங்கிலாந்து அரசவைச் சான்றோர்" என்ற விருதை இவருக்கு அளித்து கவுரவித்தது. அதுபோல, இந்திய அரசும் இவருக்கு " பாரத விபூஷன்" விருதை வழங்கி உள்ளது.மேலும் பல பல்கலைக் கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டமும் அளித்து கௌரவித்து உள்ளது.

1956 முதல் 1958 ஆம் ஆண்டு வரை இவர் கல்கத்தா விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்துள்ளார். " விஞ்ஞான பரிச்சயம்" என்ற பெயரில் இதழ் ஒன்றை ஆரம்பித்து பல அறிவியல் உண்மைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். இவ்வளவு சிறப்பைப் பெற்ற போஸ் ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் 1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.