கோக்கலே சாமியார் பாடல்
(இராமலிங்க சுவாமிகள் "களக்கமறப் பொதுநடனம் நான் கண்டுகொண்ட தருணம்" என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது)
களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
தொண்டைவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ?
