கொள்கை

கொள்கை

bookmark

போஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில் இந்திய காங்கிரஸ் சபை படிப்படியாக விடுதலை பெறுவதை ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில் பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.

போசு இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும் கட்டுப்பாடுகள் தகர்ந்ததால் காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதினார். இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போதும் இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, நிப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்திய தொழிலாளர்களைக் கொண்டும் நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும் இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.