கணிதமேதை ராமானுஜம்
சீனிவாச இராமானுஜன் இந்தியாவில் பிறந்த கணித மேதை. இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சீனிவாசனுக்கும் கமலத்தம்மாளுக்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் தான் இருந்தார்.
ராமானுஜருக்கு ஐந்து வயது நிரம்பியதும் வைதீக முறைப்படி பூணூல் அணிவிக்கப்பட்டு ஆரம்ப பாடசாலையில் சேர்த்தனர்.பிறப்பிலேயே இராமானுஜர் மிகுந்த அறிவுத் திறன் கொண்டு விளங்கினார்.தனது தாயார் அன்புடன் சுட்டுக் கொடுக்கும் முறுக்கில் கூட எத்தனை வளையங்கள் உள்ளன என்று கணக்கிடுவாராம்.அது மட்டும் அல்ல, அம்மாவின் கையால் செய்து கொடுத்த தேன் குழலில் எத்தனை எள்ளு உள்ளது, என்று அதற்கு ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டு பிடித்து விடுவாராம்.
இவரை கணித மேதை என்று சொல்வதை விட கணித விஞ்ஞானி என்று சொல்லலாம். இராமானுஜத்துக்கு பெருமாளே கணக்கு சொல்லிக் கொடுத்தார் என்ற ஆதாராம் இல்லாத செவி வழி செய்தியும் ஒன்று உண்டு. இதற்கு அவரது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை சான்றாகக் கூறுகின்றனர். அது என்னவெனில்
ஒரு முறை சிறு வயதில் இராமனுஜத்தை சில நாழிகைகள் காணாமல் அவரது தாய் பதறிப் போனார்கள். ஊர் முழுக்கத் தேடினார்கள்.கிடைக்கவில்லை.இராமானுஜத்தின் நெருங்கிய நண்பனை அழைத்து தேட வேண்டினர்.இராமானுஜன் அடிக்கடி தனது வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருக்கும் சாரங்கபாணி கோயிலுக்கு அடிக்கடி செல்வார் , அது அவரது நண்பனுக்குத் தெரியும்.சரி, அங்கு தான் இருப்பான் என்று அவரது நண்பன் போய்ப் பார்க்க இராமானுஜர் அங்கு தான் கோயில் மண்டபத்துக்குப் பின்னால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்.அவரை சுற்றி சுண்ணாம்புக் கட்டியால் கணக்குத் தீர்வு வழிமுறைகள் எழுதப்பட்டு இருந்தன.
இராமானுஜத்தை தட்டி எழுப்பினார் நண்பர். தூக்கம் கலைந்த ராமானுஜர், தன்னை எழுப்பிய காரணத்துக்காக தனது உயிர் நண்பன் மீதே கோபப்பட்டுக் கத்தினார்.அவரது கோபத்திற்கான விளக்கத்தை அவரது நண்பர் கேட்க " நான் சிக்கலான கணக்கு ஒன்றிற்கு தீர்வு கண்டு கொண்டு இருந்தேன். நீ அனாவசியமாக என்னை எழுப்பி விட்டாயே!" என்றார். இவ்வாறு, ஒரு முறை அல்ல, பல முறை தனது வாழ்க்கையில் சிக்கலான பல கணக்குகளுக்கு தனது கனவின் மூலமே தீர்வு கண்டு இருக்கிறார் அந்தக் கணித மேதை.
தான் படிக்கின்ற காலத்தில் எல்லாப் பாடங்களிலும் அவர் குறைந்த மதிப்பெண்களைத் தான் பெற்றார். ஆனால், எப்போதும் கணக்கில் மட்டும் நூற்றுக்கு நூறு வாங்குவாராம்.இதன் காரணமாக அவருக்கு கிடைத்த உதவித் தொகை நின்று போய் விட்டது.அதனால் மிகவும் சிரமத்துடன் அவர் படித்த காலங்களும் உண்டு.
இராமானுஜத்தின் திருமண வாழ்வைப் பற்றி சொல்ல வேண்டும் எனில் 14 ஆம் தேதி ஜூலை மாதம் 1909 ஆம் ஆண்டு , இவருக்கும் ஜானகி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.அப்போது இராமானுஜத்துக்கு 21 வயது. மணமகள் ஜானகிக்கு வெறும் 9 வயது.தனக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாத குழந்தையாக இருந்தாளாம் ஜானகி.
1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார்.
இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.
1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.
ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914 இல்தான். கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.
இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.
சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.ஆம்,இங்கிலாந்தின் குளிர் இராமனுஜத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.அது தவிர, இரவு பகல் கடின வேலை.அவர் அப்படியே தூங்கினாலும் அவரது மூளை எதைப் பற்றியாவது சுறுசுறுப்புடன் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும்.ஒரு கட்டத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட இந்தியா திரும்பினார் இராமானுஜர்.அவரது உடல் 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்க் கொண்டு மிகவும் மோசமான நிலையை அடையத் தொடங்கியது.படுத்த, படுக்கையாக இருந்த அவர் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் தனது 33 ஆவது வயதில் மறைந்தார்.அவர் மறைந்தாலும்,அவருக்கு மணி மகுடம் சூட்டுவது போல, அவர் கண்டு பிடித்த கணிதக் கோட்பாடுகள் அனைத்தும் இன்றும் விஞ்ஞானிகள் பலருக்கு உதவிகரமாகத் தான் உள்ளது.
