கடிமணப் படலம் - 1287

bookmark

அனைவரும் முறையாக வருதல்

தயரதன். சனகன் முதலியோர் ஆசனத்து அமர்தல்
 
1287.    

அனையவன். மண்டபம் அணுகி. அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும். மன்னரும். முறையின் ஏறினார்;
சனகனும். தன் கிளை தழுவ. ஏறினான்.
 
அனையவன் மண்டபம் அணுகி - அத்தன்மையனாய் வந்த  தசரத
வேந்தன் மண மண்டபத்தை நெருங்கி; அம்பொ(ன்)னின் புனை மணி
ஆதனம்  பொலியத் தோன்றினான் - அழகிய பொன்னினால் செய்து
மணிகளால்  அலங்கரிக்கப்பட்ட  ஆசனத்தில்.   அவ்வாசனம்   அழகு
பெறுமாறு  ஏறி  வீற்றிருந்தான்;  முனிவரும்  மன்னரும்  முறையின்
ஏறினார்   -   முனிவர்களும்   அரசர்களும்  தத்தம்   தகுதிக்கேற்ப
இருக்கைகளில்   ஏறி  அமர்ந்தனர்;  சனகனும்  தன்  கிளை தழுவ
ஏறினான்  - (பின்பு) சனக மன்னனும் தன் சுற்றத்தார் புடை சூழ  ஓர்
ஆசனத்தில் ஏறியமர்ந்தான்.

அனைவரும்     தத்தமது  தகுதிக்கேற்ற  முறைப்படியிடப்பட்டுள்ள
இருக்கைகளில்  அமர்ந்தனர் என்பார் “முறையின்  ஏறினார்”  என்றார்.
தசரதன் பெருவேந்தன் ஆதலாலும்  மணமகனின்  தந்தை  ஆதலாலும்.
விருந்தினன்  ஆதலாலும்.  அவன்  இருக்கையில்  அமர்ந்தபின்  சனக
மன்னன்     தன்    இருக்கையில்     அமர்ந்தனன்.     முனிவர்கள்
மதித்தற்குரியார்  ஆதலானும்.  அரசர்கள்   விருந்தினர்   ஆதலாலும்.
அவர்களும்   அமர்ந்த  பின்பே  சனகன்   அமர்ந்தான்.   ஆதலால்.
சனகன் அமர்வை இறுதியில் கூறியுள்ளார்.                      43