கடிமணப் படலம் - 1286

தயரதனோடு சென்ற அரசர்கள்
1286.
பரந்து தேர். களிறு. பாய் புரவி. பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழும் எழும் நேமி மன்னவர்.
புரந்தரன் புடை வரும். அமரர் போன்றனர்.
பரந்த தேர். களிறு. பாய்புரவி- பரவின தேர்களும். யானைகளும்
பாய்ந்து செல்லும் திறமுடைய குதிரைகளும்; பண்ணையின் தரம்தரம்
நடந்தன - கூட்டம் கூட்டமாய். இனவாரியாக நடந்து சென்றன;
தானை வேந்தனை நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் -
சேனைகள் மிக்க தசரதச் சக்கரவர்த்தியை எப்போதும் (பின்பற்றித்)
தொழுதெழுந்து செல்கின்ற ஆணைச் சக்கரமுடைய அரசர்கள்;
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் - இந்திரனைப் புடை
சூழ வரும் தேவர்களைப் போன்று உடன் சூழ்ந்து சென்றனர்.
மேல் இந்திரன் முடிசூட்டு விழாவன்று தேவர் தலைவன் இந்திரன்
தலை நகர் அமராவதி போன்றிருந்தது மிதிலை மாநகர் என்றார்.
இங்கு.மொய்த்துள்ள அரசர்கள் எல்லோரும் தேவர்கள் போலவும்.தயரதச்
சக்கரவர்த்தி தேவேந்திரன் போலவும் திகழ்ந்தனர் என்கிறார்.
தசரதனைத் தேவர் தலைவனுக்கு ஒப்பிட்டுப் பன்முறை மேலேயும்
கூறியுள்ளார். 42