கடிமணப் படலம் - 1285

முரசம் முதலியன ஆர்த்தல்
1285.
மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை. பேரிகை.
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை.
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே.
மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன - (அப்பொழுது)
மங்களகரமான மண முரசுகளின் கூட்டம் மழை மேகங்களின்
ஒலியைப் போல் முழங்கின; சங்குகள் முரன்றன - (மங்கலச்) சங்கின்
கூட்டங்களும் ஒலித்தன; தாரை. பேரிகை பொங்கின -
தாரையென்னும் ஊது குழலும். பேரிகையென்னும் தோற் கருவியும்
மிக்கொலித்தன; மறையவர் புகலும் நான்மறை - வேதம் வல்லார்
ஒலிக்கின்ற நான்கு வேதங்களின் ஒலி; கங்குலின் ஒலிக்கும் மாகடலும்
போன்றதே - இரவுப் பொழுதில் மிக்கு ஒலிக்கும் பெருங் கடலின்
ஓசையை ஒத்தது ஆயிற்று.
ஒலிகளை அடுக்கிக் கூறி. மணக்காட்சியைக் கற்பார் மனக்கண் முன்
கொண்டுவருகிறார் கவிஞர். 41