கடிமணப் படலம் - 1273

bookmark

1273.    

கலவைகள் புனைவாரும். கலை நல தெரிவாரும்.
மலர் குழல் மலைவாரும். மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும். சிகழிகை அணிவாரும்.
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும்.*
 
கலவைகள்   புனைவாரும் -  கலவைச்   சந்தனங்களைப்   பூசிக்
கொள்வாரும்;  கலைநல தெரிவாரும் - நல்ல ஆடைகளை ஆராய்ந்து
அணிந்து  கொள்வாரும்;  மலர்  குழல்  மலைவாரும்;-  கூந்தலிலே
மலர்களைச்சூடி  கொள்வாரும்;  மதிமுக  மணி  ஆடித்திலதம் முன்
இடுவாரும் -  அழகிய  கண்ணாடிமுன்   நின்று.  தம்   மதிப்போன்ற
முகங்களில் திலகத்தை இட்டுக் கொள்வாரும்; சிகழிகை அணிவாரும் -
சிகழிகை  என்னும்  தலைமாலைகளை அணிந்து  கொள்வாரும்;  இலவு
இதழ்பொலிகோலம்  எழில்பெற  இடுவாரும் -  இலவம் பூப்போலச்
சிவந்த  தங்கள்  அழகிய  உதடுகளிலே  அழகுறக்   கோலம்  இட்டுக்
கொள்பவர்களும் (ஆயினர்).  

இறுதியடிக்கு   இலவின்  இதழ்  போன்ற  செம்பஞ்சுக்  குழம்பினை
(அடிகளில்) இட்டுக் கொள்வாரும் எனவுமாம்.                    29