கடிமணப் படலம் - 1264

bookmark

நகரமாந்தர் நன்முயற்சி

மக்களின் மகிழ்ச்சி
 
1264.    

முரசு அறைதலும். மான
   முதியரும். இளையோரும்.
விரை செறி குழலாரும்.
   விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும்.
   உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும்
   இரவு ஒரு கரை கண்டார்.
 
முரசு  அறைதலும்- (கட்டளைப்படியே)    முரசு  அறிவித்தவுடன்;
மான  முதியரும்   இளையோரும்   விரைசெறி   குழலாரும்   -
பெருமைக்குரிய    முதியவர்களும்.    இளையவர்களும்.    மணம்மிக்க
கூந்தலையுடையமகளிரும்;    விரவினர் விரைகின்றார் - தம்மிற் 
கலந்தவர்களாய்  (நகரை  அழகு  செய்ய)  விரைந்தவராய்;  உரைசெறி
கிளையோடும்    உவகையின்   உயர்கின்றார்  -   சுற்றத்தாரோடு
உரையாடிச்       சீதை       மணம்       எண்ணி.      களிப்பில
உயர்ந்தவராய்;     கரைதெரிவு     அரிது     ஆகும்     இரவு
ஒருகரை கண்டார்  -  (என்று  பொழுது விடியுமோ  சீதைமணங்காண
என்ற   தவிப்பால்)   கரைகாண   இயலாததாய்  நீண்டிருந்த    அந்த
இருட்கடலினைக்  கடந்து  விடியல்  எனும்  கரையினை   அடைந்தவர்
ஆயினர்.  

விடியலை.  ஒரு ‘கரை’ கண்டார் என்பதனால். இரவு கடல் ஆயிற்று.
ஏகதேச  உருவகம்.  இராமபிரானும்   பிராட்டியும்   விரகவேட்கையால்
விடியலுக்கு   ஏங்கித்   தவித்தது   போலவே.   இவர்   மணங்காணத்
துடிக்கும்     காட்சி    வேட்கையில்.   மிதிலையிலிருந்து    மக்களும்
விடியலுக்கு  ஏங்கியிருந்தனர்  என்பதனை   “கரை தெரிவு  அரிதாகும்
விடிவு ஒரு கரை கண்டார்” என்பதனால் உணர்த்தியதிறம் காண்க.   20