கடிமணப் படலம் - 1261

1261.
‘தன் நோக்கு எரி கால். தகை. வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டுகொலாம்;
என் நோக்கினும். நெஞ்சினும். என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே!
கடுவல்விடம் - மிகக் கொடிய வலிமை வாய்ந்த விடமானது; தன்
நோக்கு எரிகால் தகைவாள் அரவின் பல் நோக்கினது - தன்
கண்களினின்று தீ கக்கும் தன்மையுடைய வாள் போற் கொடிய
பாம்பினது பல்லை இடமாகக் கொண்டுள்ளது; என்பது பண்டு கொல்
ஆம் - என்பது பழைய செய்தி போலும்; என் நோக்கினும்
நெஞ்சினும் என்றும் உளார் மெல் நோக்கினது - (இப்பொழுதோ
அக்கொடிய நஞ்சு) என் விழிகளிலும் நெஞ்சினிலும் எப்போதும்
நீங்காது இருப்பவராகிய அந்நங்கையரின் குளிர்ந்த பார்வையையே
இடமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவு ஆயிற்று.
சனகியின் பார்வை காதல் நோயை மிகுவித்துப் பெருந்துன்பம்
தருவது குறித்து விடமாகக் கூறப்பட்டது. “இரு நோக்கு இவள்
உண்கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு” (குறள். 1091) என்பர்
ஆதலின் நோய் நோக்கின் வலிமை குறித்தவாறு. இராமன்
நோக்கியிருத்தல் உருவெளித் தோற்றத்தில் இருத்தல்; நெஞ்சில்
இருத்தல் எப்போதும் நினைவாய் இருத்தல். நோக்கில் நஞ்சு
எரிகால்வது ஒன்றை விலக்கிப் பிறிதொன்றாக நிறுவுவதால்
அவநுதியணி. 17