கடிமணப் படலம் - 1256

bookmark

கவிக்கூற்று

இரவில் இராமனது எண்ண அலைகள்
 
1256.    

என. இன்னன பன்னி. இருந்து உளைவாள்.
துனி உன்னி. நலம்கொடு சோர்வுறுகால்.
மனை தன்னில். வயங்குறும் வைகு இருள்வாய்.
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்;
 
என இன்னன பன்னி இருந்து  உளைவாள்  - என்று இவ்வாறான
வார்த்தைகளைப்  பலமுறையும்  சொல்லிச்   சொல்லி  வருந்துபவளாய்;
துனி உன்னி.  நலம்   கொடு   சோர்வுறுகால் -   (தனக்கு  வந்த)
துன்பங்களை  நினைந்து  நினைந்து (பெண்மைக்குரிய  நாண்  முதலிய)
குணங்களையும்   விட   இயலாமல்   பற்றிக்    கொண்டு   (பிராட்டி)
தளர்வுறுகின்ற  அந்த  இரவுப் பொழுதில்; மனைதன்னில் வயங்குறும்
வைகு  இருள்  வாய்  -  (தனக்கு  ஒதுக்கியுள்ள)  திருமாளிகையிலே.
இருள்மிகும்   இரவுப்பொழுதிலே;   அனகன்   நினைகின்றன  யாம்
அறைவாம்  -  குறை  கலவாத  இராமபிரான்  (மனத்தே)  நினைவாய்
நிகழ்கின்றனவற்றை (இனி) யாம் உரைப்போம். 

கவிக்கூற்று. அனகம்: குற்றம். குறை: பாவம்.                   12