எழுச்சிப் படலம் - 892
புழுதியின் செயல்
892.
ஆர்த்தது. விசும்பை முட்டி;
மீண்டு. அகன் திசைகள் எல்லாம்
‘போர்த்தது; அங்கு ஒருவர்தம்மை
ஒருவர் கட்புலம் கொளாமை
தீர்த்தது; செறிந்தது ஓடி.
திரை நெடுங் கடலை எல்லாம்
தூர்த்தது. சகரரோடு
பகைத்தென. - தூளி வெள்ளம்.
தூளிவெள்ளம் - (சேனையால் எழுப்பப்பட்ட) புழுதிக் கூட்டம்;
ஆர்த்தது - நிரம்பியதாய்; விசும்பை முட்டி - வானத்தைத் தாக்கி;
மீண்டு - (மேலே செல்ல இடம் இல்லாததால்) திரும்பி; அகல்
திசைகள் எங்கும்- அகன்ற திசைகள் எல்லாவற்றையும்; போர்த்தது-
மூடிக் கொண்டது; அங்கு - அத்திசைகளில்; ஒருவர்தம்மை ஒருவர்-
ஒருவரையொருவர்; கண் புலம் கொளாமை - கண்களால் பார்க்க
முடியாதபடி; தீர்த்தது - செய்து முடித்தது; செறிந்தது ஓடி - (பின்பு
அது) நெருக்கமாக விரைந்து ஓடி; சகரரோடு பகைத்தது என -
சகரரோடு பகை கொண்டதுபோல; திரை நெடுங் கடலை எல்லாம் -
அலைகளோடு கூடிய கடலையெல்லாம்; தூர்த்தது - தூர்த்துவிட்டது.
தூளிவெள்ள மிகுதியை விளக்கக் கடலைத் தூர்த்ததாகக்
கூறப்பட்டது. -தொடர்பு உயர்வு நவிற்சியணி. தூர்த்தற்குப்
‘பகைத்தென’ என்று காரணம் கற்பித்துக் கூறியது ஏதுத்
தற்குறிப்பேற்ற அணி. 76
