எழுச்சிப் படலம் - 883
கௌசல்யை செல்லுதல்
883.
வெள் எயிற்று இலவச் செவ்வாய்
முகத்தை வெண் மதியம் என்று.
கொள்ளையின் சுற்றும் மீன்கள்
குழுமிய அனைய ஊர்தி.
தெள் அரிப் பாண்டி பாணிச்
செயிரியர் இசைத் தேன் சிந்த.
வள்ளலைப் பயந்த நங்கை.
வானவர் வணங்க. போனாள்.
வெள் எயிறு- வெண்மையான பற்களையும்; இலவச் செவ்வாய் -
சிவந்த இலவின் இதழ்போன்ற வாயையும் உடைய; முகத்தை -
(கோசலாதேவியின்) முகத்தை; வெண் மதியம் என்று - வெண்மையான
நிறைமதி என்று கருதி; கொள்ளையின் சுற்று - (வானிலே) மிகுதியாகச்
சுற்றிக் கொண்டிருக்கும்; மீன்கள் குழுமிய அனைய - நட்சத்திரங்கள்
ஒன்றாகக் கூடினாற் போல; ஊர்தி - சிவிகையாகிய ஊர்தியிலே;
வள்ளலைப் பயந்த நங்கை- இராமனைப் பெற்ற கோசலாதேவி; தெள்
அரிப் பாண்டி - தெளிந்த வண்டின் இசை போன்ற பாண்டி என்னும்
தக்கேசிப் பண்ணினால்; பாணிச் செயிரியர் - ஆகிய இசைப் பாட்டில்
வல்ல பாணர்; இசைத் தேன் சிந்த - இசையாகிய தேனைச்
சொரியவும்; வானவர் வணங்க - தேவர்கள் (தன்னை) வணங்கவும்;
போனாள் - சென்றாள்.
கோசலையின் முகத்தைச் சந்திரன் என்று கருதி வானெங்கும்
உள்ள நட்சத்திரங்கள் ஒன்றாகக் கூடியதுபோலப் பன்னிற மணிகளால்
செய்யப்பெற்ற பல்லக்கின்மேல் கோசலை சென்றாள் என்பது. -
மயக்க அணியை அங்கமாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணி. 65
