எழுச்சிப் படலம் - 874
வண்டிக் காளைகள் வெருண்டோடுதல்
இசை ஒலியும் எருதுகளும்
874.
கொற்ற நல் இயங்கள் எங்கும்
கொண்டலின் துவைப்ப. பண்டிப்
பெற்ற ஏறு. அன்னப் புள்ளின்
பேதையர் வெருவி நீங்க.
முற்று உறு பரங்கள் எல்லாம்.
முறை முறை. பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி.
யோகியின் பரிவு தீர்த்த.
கொற்ற நல் இயங்கள்- வெற்றி பொருந்திய நல்ல வாத்தியங்கள்;
எங்கும் - எவ்விடத்தும்; கொண்டலின் துவைப்ப - மேகங்களைப்
போல ஒலிக்க; பண்டிப் பெற்றம் ஏறு - (அதனால் அஞ்சிய)
வண்டியில் பூட்டப்பெற்ற எருதுகள்; அன்னப் புள்ளிகள் - அன்னப்
பறவையைப் போல; பேதையர்- பேதைப் பெண்கள்; வெருவி நீங்க -
அஞ்சி அகன்று செல்லுமாறு; முற்று உறு - (தம்மேல்) முழுதும்
பொருந்திய; பரங்கள் எல்லாம் - சுமைகள் எல்லா வற்றையும்;
முறைமுறை - வரிசை வரிசையாக; பாசத்தோடும் - (அவற்றைக்
கட்டிய) கயிறுகளோடும்; பற்று அற வீசி - தொடர்பு அற்றுப் போக
(அப் பண்டங்களைச்) சிதறச் செய்துவிட்டு; ஏகி - ஓடிப் போய்;
யோகியின் - தவயோகியர் போல; பரிவு தீர்ந்த - துன்பம் நீங்கின.
சுமை ஏற்றிய வண்டிகளில். பூட்டப்பெற்ற எருதுகள். பல
வாத்தியங்களின் பேரொலியால் வெருண்டு வண்டியில் உள்ள
பொருள்கள் எல்லாம் சிதறுமாறு. தம் கட்டுகளையும் அறுத்துக்
கொண்டு மூர்க்கத்தனமாகச் சென்றன என்பது.
பாசம் நீங்குதல். பரிவுதீர்தல். பேதையர் வெருவி நீங்குதல் - இவ்
இயல்புகளால் யோகி. வண்டி எருதுக்கு உவமை. யோகிக்கு: பாசம்
தீர்தல் - ஆசை ஒழிதல். பரிவுதீர்தல் - பிறவித் துன்பம் நீங்குதல்.
எருதுக்கு: பாசம் தீர்தல் - கட்டிய கயிறு அற்றுப்போதல்: பரிவு
தீர்தல் - சுமைத் துயரம் நீங்குதல். 58
