எழுச்சிப் படலம் - 857
மகளிர் மகிழ்ச்சியால் ஓடுதல்
மகளிர் மனம் களித்து ஓடுதல்
857.
சந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்.
சிந்து மேகலை சிந்தையும். செய்கலார்.
‘எந்தை வில் இறுத்தான்’ எனும் இன் சொலை
மைந்தர் பேச. மனம் களித்து ஓடுவார்.
(பெண்கள்) எந்தை- எம் தந்தையான இராமன்; வில் இறுத்தான்-
சிவ தனுசை முறித்தான்; எனும் இன் சொலை - என்னும் இனிய
வார்த்தையை; மைந்தர் பேச - ஆடவர் சொல்ல; மனம் களித்து -
(அது கேட்டு) மனம் மகிழ்ந்து; சோர்பவை - அவிழ்ந்து விழக்கூடிய;
சந்தம் வார் குழல் - அழகிய நீண்ட கூந்தலை; தாங்கலார் - ஏந்திக்
கொள்ளாதவர்களாயும்; சிந்தும் மேகலை - (அறுந்து) விழுகின்ற
மேகலையணியை; சிந்தையும் செய்கலார் - (பொறுக்கியெடுக்க)
எண்ணாதவர்களுமாகி; ஓடுவார் - (இராமனது திருமணம் கருதி)
ஓடுவார்கள்.
மடந்தையர் களித்து. தாங்கலார். செய்கலார். ஓடுவார் என
இயைக்கவும். ஆடவர் இராமனது வீரச் செயலைச் சொல்ல. அது
கேட்ட மடந்தையர் திருமணத்தைக் காணும் விருப்பத்தால்
ஓடுகின்றார். அவ்வாறு அவர்கள் ஓடும்போது கூந்தல் அவிழ்தல்.
மேகலை சிந்துதல் ஆகியவற்றையும் கருதாமல் செல்கின்றார்
என்பது. 41
