எழுச்சிப் படலம் - 854
பெண்யானையின் மீதிருந்த பெண்கள் செயல்
பிடியின்மேல் ஏகும் மங்கையர்
854.
பித்த யானை பிணங்கி. பிடியில் கை
வைத்த. மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்.
எய்த்து இடுக்கண் உற்றார். புதைத்தார்க்கு இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே.
பித்த யானை- வெறி பிடித்த யானைகள்; பிணங்கி - மாறுபட்டு;
பிடியில் கை வைத்த - பெண்யானைகளின் மேல் கையை வைத்தன;
மேல் இருந்து அஞ்சிய - (அப்போது) அப் பெண் யானைகளின்
மேல் இருந்து அஞ்சிய; மங்கைமார் - மகளிரின்; கண் புதைத்தார்க்கு
- (இரு கைகளாலும்) கண்களை மூடத் தொடங்கியவர்க்கு; இரு
கைத்தலங்களில் - இரண்டு கைகளுக்குள்; அடங்காமை- (அக்
கண்கள்) அடங்காமையால்; எய்த்து- (அவர்கள்) இளைத்து; இடுக்கண்
உற்றார் - வருத்தம் அடைந்தார்கள்.
பிடியின் மேல் இருந்த பெண்கள் அஞ்சிக் கண்களைப்
புதைத்தனர் என்பது. கண்கள் கைகளில் அடங்காமையால் அவர்கள்
மிக வருந்தினர். 38
