எழுச்சிப் படலம் - 851
851.
கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி.
மாற்றம் பேசுகிலாளை. ஒர் மைந்தன்தான்.
‘ஆற்று நீரிடை. அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை. யாவர் கொலோ?’ என்றான்.
கூற்றம் போலும்- இராமனைப் போல; கொலை - கொல்லும்
தன்மையுள்ள; கணினால் அன்றி - கண்களால் அல்லாமல்; மாற்றம்
பேசுகிலாளை - (வாய் திறந்து) மறுமொழி பேசாத ஒரு பெண்ணை
(பார்த்து); ஒர் மைந்தன் - ஒரு காளை; ஆற்று நீரிடை - (வழியிலே)
ஆற்றின் நீரிலே; உமை - உம்மை; அம் கைகளால் எடுத்து - அழகிய
கைகளால் தூக்கி எடுத்து; ஏற்றுவார் - (கரை) ஏற்றவல்லவர்; யாவர்
கொல் - யார்தாமோ?; என்றான் - என்று வினவினான்.
ஆற்றைக் கடக்கும்போது உம்மைக் கரை சேர்க்க ஆடவன்
வேண்டுமே! அப்போது வாய் திறந்து கூப்பிட்டால் தானே அது
முடியும். இந்த மவுன விரதம் அப்போது கலையாதோ’ என்று
வினவுகின்றான். ‘கண்ணினாலன்றி மாற்றம் பேசுகிலாளை’-
‘கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்.
என்ன பயனும் இல’ - குறள் 1100. 35
