எழுச்சிப் படலம் - 850

bookmark

850.    

தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை. ஒர் காளைதான்.
‘நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்’ என்றான்.
 
தரங்க வார்குழல்- அலைபோன்று நீண்ட கூந்தலையும்;  தாமரைச்
சீறடி  -  தாமரை  போன்ற  சிறிய அடிகளையும்; வாள் கருங்கண் -
வாள்  போன்ற  கரிய  கண்களையும்;  உடையாளை  - உடைய  ஒரு
பெண்ணை; ஒர்  காளை  -  ஒரு  வீரன்;  நெருங்கு பூண் முலை -
அணிகள்  பூண்ட நெருங்கிய முலைகளையும்; நீள்வளைத்  தோளினீர்
-   வளையல்களையணிந்த    நீண்ட   தோள்களையும்   உடையவரே;
மருங்குல்  -  (நீங்கள்)  உமது  இடையை;  எங்கு - எந்த  இடத்தில்;
மறந்தது - மறந்து வைத்து விட்டீர்கள்; என்றான் - என்று கேட்டான்.

அந்த     மங்கையின்  இடை  கண்ணுக்குப்  புலனாகாதவாறு  மிக
நுண்ணியதாக  இருந்தது.  அப்பெண்ணோடு   உரையாட   விரும்பியே
அந்த இளைஞன் இவ்வாறு வினாவினான்.                       34