எம். விஸ்வேஸ்வரய்யா
‘கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விடா முயற்சி, வேளாண்மையில் புதுமை, தானியங்கி மதகின் கண்டுபிடிப்பு ,போன்ற சிறப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது . சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை ஏற்படுத்தி மாபெரும் சாதனையாளராக விளங்கிய எம். விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.
எம். விஸ்வேஸ்வரய்யா அவர்கள், 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
பதினைந்து வயதில் தந்தையை இழந்த விஸ்வேஸ்வரய்யா அவர்கள், தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார். 1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார்.
தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர், “இந்திய பாசன ஆணையத்தில்” பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903ல் புனேவிலுள்ள “கடக்வசல” நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளதடுப்புமுறை அமைப்பையும்” மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும்” வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர், ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார். இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும் மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.
1912 ஆம் ஆண்டு, மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்ட அவர், மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். ஸ்ரீ ஜெயசாமராஜெந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சாண்டல் எண்ணை நிறுவனம், உலோக தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களுரு அரசு பொறியியல் கல்லுரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923 ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 1934 ஆம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதிய விசுவேசுவரய்யா பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞரும் ஆவார்.
1918 ஆம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட எம். விஸ்வேஸ்வரய்யா 1962 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.
