உண்டாட்டுப் படலம் - 1085
கொங்கை பொற்கலசம் போன்றதனெல்
1085.
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால்.-
‘நாட்டினை அளித்தி நீ’ என்று நல்லவர்.
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு. ஓர் மங்கை கொங்கையே.
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் - ஊட்டப்பெற்ற
சந்தனக் குழம்பு வெந்து உலர்வதற்குக் காரணமான வெம்மையோடு
கூடிய; ஓர் மங்கை கொங்கை - ஒரு மங்கையினுடைய தனங்கள்; ஓர்
வாள் தொழில் மைந்தற்கு - வாளால் (போர்த்) தொழில் புரியும் ஒரு
வீரனுக்கு; நீ நாட்டினை அளித்தி என்று நல்லவர் - நீ இந்த
நாட்டினை (உன் போர்த்திறத்தால்) காப்பாயாக என்று கூறி.
நல்லோர்கள்; ஆட்டுநீர்க்கலசம் என்னல் ஆன - பட்டாபிடேகஞ்
செய்ய வைத்துள்ள (புனித) நீர்க்கலசங்களைப் போன்றிருந்தன.
இன்ப நாட்டிற்குரிய கலசங்களாதலின் இவ்வாறு கூறினார்;
தற்குறிப்பேற்ற அணி.
நாடுகாக்கும் போருக்காகப் பிரிந்து. வென்றி வாகை சூடி வரும்
தவைனை வரவேற்கப் பூரண கும்பமேந்தி நிற்கின்றாள் என்க. அவன்
பெற்ற துன்பம் எல்லாம் நீங்க இன்பநாட்டிற்கு அழைக்கும்
பொற்கலசத்தோடு. ‘அந்த நாட்டை அளித்தாய்; இந்த நாட்டினையும்
ஏற்பாயாக என்று வரவேற்பது போன்றிருந்தன பொங்கும் கொங்கைப்
பொற்குடங்கள் என்பது கருத்து. 39
