உண்டாட்டுப் படலம் - 1083
காதலி மெலிந்தமை நோக்கிக் காதலன் பூரித்தல்
1083.
பொலிந்த வாள் முகத்தினான்.
பொங்கி. தன்னையும்
மலிந்த பேர் உவகையால். -
மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன். ஓர்
நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி. - தேன்
புயங்கள் வீங்கினான்.
மாற்றுவேந்தரை நலிந்த வாள் உழவன் - பகை மன்னர்களை
வருத்திய வாட்படையையுடைய வீரன் ஒருவன்; ஓர் நங்கை கொங்கை
போய் மெலிந்தவா நோக்கி - கொங்கைகள் (தன் பிரிவினால்)
மெலிந்து போய் இருப்பதைப் பார்த்து; பொங்கி. தன்னையும் மலிந்த
பேர் உவகையன் - (தன் மேல் அவள் வைத்துள்ள காதலின்
அளவை அம்மெலிவால் கண்டு) (மனம்) பொங்கி. தன்னையும்
மிஞ்சிய பேருவகையடைந்தவனாய்; புயங்கள் வீங்கினான் - தன்
தோள்கள் பூரித்து நின்றான்.
பிரிவில். கற்புடையாள் மெலிவு. கணவன் பூரிப்புக்குக் காரணமாம்
என்றபடி. மாற்று வேந்தரை நலியும் வாள் உழவன் பெருமை
முழுவதும் இவள் மெலிவுக்குள் அடங்கிற்று என்றபடி. 37
