உண்டாட்டுப் படலம் - 1064
ஒரு மடந்தை, மயக்கத்தால் வெறும் கிண்ணத்தை
வாயில் வைத்துக் கொள்ளுதல்
1064.
எள் ஒத்த கோல மூக்கின்
ஏந்திழை ஒருத்தி. முன்கை
தள்ள. தண் நறவை எல்லாம்
தவிசிடை உகுத்தும். தேறாள்.
உள்ளத்தின் மயக்கம் தன்னால்.
‘உப் புறத்து உண்டு’ என்று எண்ணி.
வள்ளத்தை. மறித்து வாங்கி.
மணி நிற இதழின் வைத்தாள்.
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி - எள்ளுப்
பூப்போன்ற அழகிய மூக்கினையுடையாளாய் அணிகலம் பூண்டாள்
ஒருத்தி; முன்கை தள்ளத் தண்நறவையெல்லாம் - முன்னங் கை
நடுங்கியதனால் குளிர்ந்த மது முழுவதும்; தவிசு இடை உகுத்தும்
தேறாள் - (தன்) ஆசனத்திற் சிந்திவிட்டதை; தேறாள் - (சிறிதும்)
உணராதவளாய்; உள்ளத்தின் மய்ககம் தன்னால் - மனத்தின் உள்ளே
உள்ள மதுவின் மயக்கத்தினால்; உப்புறத்து உண்டு என்று எண்ணி -
மதுக்கிண்ணத்தின் பின்புறத்தில் மது இருக்கும் என்று கருதி;
வள்ளத்தை மறித்து வாங்கி - மதுக்கிண்ணத்தைக் கீழ்மேலாகக்
கொண்டு; மணி நிற இதழின் வைத்தாள் - பதுமராக மணி போன்ற
தன் சிவந்த அதரத்தில் வைத்துக்கொண்டாள்.
கீழ்மேல் தெரியாது உழலும் மதுமயக்கின் அவலம் கூறியவாறு.
முன் கை தள்ளத் தண் மதுவையெல்லாம் தவிசிடை உகுத்ததும்
அவளுக்குத் தெரியாமைக்குக் காரணம் கண்மயக்கம்; கண்
மயக்கத்திற்குக் காரணம் மது வுண்பார்க்கு வரும் உள் மயக்கம்.
அதனால். “உகுத்தும் தேறாள். உள்ளத்தின் மயக்கம் தன்னால்”.
என்றார். மேலும். “மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல்
மயக்கும் வைத்தாம்” (கம்ப. 4358) என்பார். 18
