இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
“தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
