இராம்சே - 2
பேராசிரியர் பதவி கிடைத்தாலும் இராம்சே தனது ஆராய்ச்சியை மட்டும் நிறுத்த வில்லை.அவர் அப்போது காற்றில் கலந்துள்ள வாயுக்கள் பற்றி ஆய்வு நடத்திக் கொண்டு இருந்தார்.அப்பொழுது இயற்பியல் அறிஞர் இராலிப் பிரபு, நைட்ரஜன் வாயு பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் கருத்துக்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழும்பியது.ஆனால், இராம்சேவுக்கு இராலியின் கருத்தில் உடன் பாடு இருந்தது. எனவே அறிஞர் இராலியை இராம்சே சந்தித்துப் பேசினார்.இருவருக்கும் ஒரு நட்பு மலர்ந்தது. இருவரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தார்கள் என்பதால், இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி செய்ய உடன் பட்டனர்.
காற்றில் இருந்து நைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் பணியில் இராலி ஈடுபட்டார். அதே நைட்ரஜனை இரசாயன முறையில் பிரித்தெடுக்க வேண்டும் என்று இராம்சே முயற்சி செய்து கொண்டு இருந்தார். கடைசியில் இருவரது பரிசோதனையும் வெற்றி பெற்றது. ஆனால், அவர்கள் பிரித்தெடுத்த நைட்ரஜன்களுக்கு இடையே எடையில் ஒன்றுக் ஒன்று வேறுபாடு இருப்பதை உணர்ந்தனர். காற்றில் இருந்து பிரித்து எடுக்கப் பட்ட நைட்ரஜன் எடை அதிகமாக இருந்தது. ஆனால் இரசாயன முறையில் பிரித்து தனியே எடுக்கப் பட்ட நைட்ரஜன் சற்று எடை குறைவாக இருந்தது. இராலி காற்றில் இருந்து பிரிக்கப்பட்ட நைட்ரஜன் எடை அதிகம் இருக்கக் காரணம், அதில் சிறிது பிராணவாயு, நீர்வாயு மற்றும் சில வாயுக்களின் கலவை உள்ளதே காரணம் என்றார். ஆனால் இராலி அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. அதனால் தனியே ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இராலி, இராம்சே அவர்களது ஆய்வுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இராம்சேவுக்கு ஆய்வின் போது இடையிடையே ஏற்பட்ட சந்தேகங்களை இராலி அவரது அனுபவத்தைக் கொண்டு தீர்த்து வைத்தார். இறுதியில் இராம்சே மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து காற்றில் பல வாயுக்கள் கலந்து இருப்பதை நிரூபித்தார். தான் கண்டு பிடித்ததை உலகம் வியக்க ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கத் தொடங்கினார். அவரது அந்த ஆராய்ச்சியின் பயனாக கூடவே "ஹீலியம் " என்ற மந்த வாயுவைக் கண்டு பிடித்தார். இது தவிர தனது தொடர்ச்சியான ஆராய்சிகளின் மூலம் நியான், செனான், கிரிப்டான் போன்ற மற்ற புதிய வாயுக்களை கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் மூலம் உலகிற்கு பறை சாற்றினார். இதனால் அவரது புகழ் உலகம் முழுவதும் ஓங்கியது.
இராம்சே தனது ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார் அதாவது " ஒரு கண அங்குலத்தில் 15,650 கன மில்லி மீட்டரில் ஒரே ஒரு கன மில்லி மீட்டர் அளவு தான் நியான் வாயுவின் எடை இருக்கும்."
அவரது ஆய்வைப் பாராட்டி 1904 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது. ஆங்கிலேய அரசு அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்தது, இந்தியாவில் அவர்கள் தொடங்கிய அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு இராம்சேவை ஆலோசனை வழங்கும் படி நியமித்தார்கள் (என்பது குறிப்பிடத்தக்கது). அவரது ஆலோசனை படி ஆங்கிலேய அரசு பள்ளித் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. அப்பொழுது இருந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏட்டுப் பயிற்சி மட்டும் அளிக்காமல், பள்ளிகளில் (இராம்சேவின் ஆலோசனைப் படி) ஆய்வுக் கூடங்களை அமைத்துக் கட்டாய ஆய்வுப் பயிற்ச்சிகளை மாணவர்களுக்கு அளித்தது அப்போதைய ஆங்கிலேய அரசு, அந்த கல்வித் திட்டம் இன்று வரையில் இந்தியாவில் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இன்று இராம்சே இல்லை, ஆனால் அவரது கண்டு பிடிப்புகள் அவரை இன்றும் நினைவு படுத்திக் கொண்டு தான் உள்ளது.
