இந்திரா காந்தி - 1

இந்திரா காந்தி - 1

bookmark

இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.

கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இன்னும் சொல்லப் போனால் விடுதலைப் போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில் தான் இந்திரா பிறந்தார். அப்பாவும், தாத்தாவும் அடிக்கடி சிறைக்குப் போவதையும் விடுதலைப் போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே இந்திராவின் இளமைக் காலம் மெல்ல நகர்ந்தது .

இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியை தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுவது நாடு அறிந்தது . சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எவ்வித இரத்த உறவுகளும் இல்லையென்பதும் அவர் மரியாதை நிமித்தம் காந்தி எனும் பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 1936 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் லண்டனை மையமாகக் கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினராகவும் செயற்ப்பட்டார். இதனிடையே அவர் கல்விகற்ற காலப்பகுதியில் பிரோசு காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார்.

அதற்கமைய 1959 ஆம் ஆண்டு மற்றும் 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் அவர் தனது தந்தையான நேருவின் பிரதிநிதியாகவே பதவியில் நடிக்க வேண்டியிருந்ததை அவருக்கு பெரிதாக ஈடுபாடின்றி காணப்பட்டது. பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பெரிதாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்